கோவில் அடிமை நிறுத்து - உத்திரகண்ட் கோவில்கள் விடுவிப்பில் இருந்து கற்க வேண்டிய பாடங்கள்!

Update: 2021-04-11 10:46 GMT

தமிழகத்தில் கோவில் அடிமை நிறுத்து என்ற பெயரில் தமிழக கோவில்களை அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க தொடங்கப்பட்ட பிரச்சாரம் தற்போது சூடு பிடித்துக் கொண்டிருக்கிறது இந்த தேர்தலில் பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் நாங்க இரு கட்சிகளும் தாங்கள் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் கோவில்களை அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பதாக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளனர்.






இந்த வாதத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாக அண்மையில் உத்தரகாண்ட் மாநில முதல்வர் தீர்த் சிங் ராவத், கடந்த ஆண்டு அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட கேதார்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட சார்தாம் கோவில்கள் உட்பட 51 கோவில்களை அதிலிருந்து விடுவிப்பதாக அறிவித்த நிகழ்வு அமைந்துள்ளது. இதை சுட்டிக் காட்டி பலரும் தமிழகத்தில் உள்ள கோவில்களையும் அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

உத்திரகண்டில் கோவில்கள் அரசுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டதை எதிர்த்து பரம்பரை பரம்பரையாக அவற்றை பராமரித்து வரும் பூஜாரிகளும், பக்தர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. அவர்களில் ஒருவர் உத்திரகண்டில் நிலவிய கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மேலாடை இன்றி தவம் புரிந்து தனது எதிர்ப்பைத் தெரிவித்தார். 51 கோவில்களை விடுவிப்பதாக தெரிவித்தது மட்டுமே பெரிதாக பேசப்பட்டு வரும் நிலையில், இந்த விஷயத்தில் வேறென்ன முக்கியமான அம்சங்கள் உள்ளன என்று பார்க்கலாம்.





முதலாவதாக கோவில்களை நிர்ணயிக்க சார்தாம் தேவஸ்தான மேலாண்மை வாரியம் என்று ஒரு அமைப்பு 2019ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இதன் கட்டுப்பாட்டின் கீழ் தான் கடந்த ஆண்டு ஆறு கோவில்கள் கொண்டு வரப்பட்டன. தற்போது தேவஸ்தான வாரியத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட இந்த 6 கோவில்களுடன் மேலும் 51 கோவில்களும் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முடிவு கைவிடப்படும் என்று உத்திரகண்ட் முதல்வர் அறிவித்துள்ளார்.

ஆனால் விஷயம் இத்தோடு முடிந்து விடவில்லை. மத குருக்களும், பக்தர்களும் தேவஸ்தான வாரியத்தைக் கலைத்து அதைக் ஏற்படுத்த கொண்டு வந்த சட்டத்தையும் நீக்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். முதல்வரும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். ஆதி சங்கரரால் நிர்ணயம் செய்யப்பட்ட விதிமுறைகளே சார்தாம் கோவில்களில் பின்பற்றப்படும் என்றும் கோவில் பூஜாரிகளிடம் கலந்தாலோசித்தே முடிவுகள் எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.

இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் காங்கிரஸ் இதற்கு முழு ஆதரவு அளித்து மட்டுமல்லாமல் உடனடியாக தேவஸ்தான வாரியத்தை ஏற்படுத்த கொண்டு வரப்பட்ட சட்டத்தை நீக்கி செயலில் காட்ட வேண்டும் என்று கூறி இருக்கிறது‌. பல நூறு ஆண்டுகளாக உள்ளூர் பூஜாரிகளால் நிர்வகிக்கப்பட்டு வரும் கோவில்களை அரசுக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதை தாங்கள் முற்றிலும் எதிர்ப்பதாகவும் கூறியிருக்கிறது.

இது போதாதென்று பாஜக அரசு இந்த சட்டத்தை நீக்காவிட்டால் தாங்கள் 2022ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடித்து சட்டத்தை நீக்குவோம் என்றும் சூளுரைத்து இருக்கிறது. முதல்வர் தனது முனைப்பை பேச்சில் காட்டுவதை விட்டுவிட்டு சட்டசபையை இதற்கென்றே ஒருநாள் கூட்டி சட்டத்தை நீக்க வேண்டும் ‌என்றும் கேட்டிருக்கிறது. 

தமிழகத்தில் கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா போட்டு கொடுப்போம் என்றும் நாட்டுடமை ஆக்கி ஏழைகளுக்கு பகிர்ந்து அளிக்கும் என்றும் கூறும் கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ் உத்தரகண்டில் இப்படி பேசுவதற்கும் செயல்படுவதற்கும் காரணம் என்ன என்று இந்துக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். உத்தரகண்டில் கோவில்களை அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான வாரியம் மிக சமீபத்தில் ஏற்படுத்தப்பட்டது தான் என்றாலும், இந்துக்களின் தொடர் போராட்டத்தாலும், அது தேர்தலில் எதிரொலிக்கும் என்று அரசியல் கட்சிகள் மத்தியில் ஏற்பட்ட அச்சத்தாலும் மட்டுமே இது சாத்தியமாகி உள்ளது.

இதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு இதை முன்னுதாரணமாக காட்டி இந்துக்கள் ஒரு கால பூஜை கூட நடக்காமல் அவல நிலையில் இருக்கும் தமிழக கோவில்களை மீட்க வேண்டும். கந்தசஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியதற்கு கிளம்பிய எதிர்ப்பால் இன்று வேல் பிடித்து போஸ் கொடுப்பவர்கள், நாளை காங்கிரஸ் போன்று கோவில்களை விடுவிக்க முனைப்பு காட்ட வேண்டும் என்றால் அது தமிழக இந்துக்கள் கையில் தான் இருக்கிறது.

Similar News