தி.மலையில் தரிசன கட்டணம் திடீர் உயர்வு.. பக்தர்கள் அதிர்ச்சி.!

தி.மலையில் தரிசன கட்டணம் திடீர் உயர்வு.. பக்தர்கள் அதிர்ச்சி.!

Update: 2020-12-14 19:02 GMT

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் தினமும் பல ஆயிரம் கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விடுமுறை நாட்கள் மற்றும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. மேலும், கிரிவலம் செல்வதற்கும் அனுமதி அளிக்கவில்லை.

இந்நிலையில், கோயிலில் இலவச தரிசனத்தை தவிர்த்து, கட்டண தரிசனத்தில் டிக்கெட் ரூ.20-க்கும், சிறப்பு தரிசன டிக்கெட் ரூ.50-க்கும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த தரிசனம் செப்டம்பர் மாதம் முதல் மீண்டும் தொடங்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் வரிசையாக சென்று சாமி மற்றும் அம்மன் சன்னதிகளில் மட்டுமே தரிசனம் செய்யலாம் என்றும், உள்பிரகாரங்களில் தரிசனத்துக்கு அனுமதியில்லை என்றும் கூறப்பட்டிருந்தது.

பக்தர்கள் வருகை தினமும் அதிகரிப்பதை தொடர்ந்து திடீரென்று கட்டண தரிசன டிக்கெட்டை ரூ.50 ஆக உயர்த்தியுள்ளனர். ஏற்கனவே, கட்டண தரிசன முறையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில், இந்த திடீர் கட்டண உயர்வு பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் கூறியதாவது:

அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நிற்க முடியாமல் கட்டண தரிசனத்தில் வழிபாட்டுக்கு செல்கின்றனர். ஆனால் அங்கு பக்தர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுவது கிடையாது. அமர்வு தரிசனமும் கிடையாது.

கொரோனா வைரஸ் தாக்கம், வேலையிழப்பு காரணமாக வருமானம் இல்லாமல் மக்கள் தவிக்கும் நிலையில் திடீரென கட்டண தரிசன தொகையை உயர்த்தியிருப்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. கட்டண தரிசனத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு பக்தர்கள் கூறினர்.
 

Similar News