கோவில்களில் தொடரும் திருட்டு- பக்தர்கள் அச்சம்.!

கோவில்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.

Update: 2021-02-26 06:30 GMT

தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோவில்களில் வெவ்வேறு திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன.

ஈரோடு மாவட்டத்தில் மணல்மேடு என்னும் இடத்தில் இருக்கும் முருகன் கோவிலில் உள்ள உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை மர்ம நபர்கள் நேற்று முன்தினம் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது குறித்து கோவில் பூசாரி சிவசுப்பிரமணியன் புகார் அளித்ததை தொடர்ந்து சூரம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கோவில் அருகே உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

 

இதே போல் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை என்னும் இடத்தில் கவி நரசிம்மர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு மாதப்பன் என்பவர் பொறுப்பாளராக உள்ளார். இவர் கடந்த 22ஆம் தேதி கோவிலில் வழக்கமான பூஜைகளை முடித்துவிட்டு கோவில் நடையை சாத்தி விட்டு வீடு சென்றுள்ளார். மாதப்பன் மறுநாள் காலை கோவிலை திறக்க வந்த போது கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

 

பிறகு உள்ளே சென்று பார்த்தபோது சுவாமி கழுத்தில் இருந்த இரண்டு கிராம் தங்கத் தாலி மற்றும் 12 ஆயிரம் மதிப்புள்ள கோவில் பொருட்கள் காணாமல் போயிருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து தேன்கனிக்கோட்டை காவல்துறையினரிடம் மாதப்பன் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கோவில் நகைகளை திருடியவரை தேடி வருகின்றனர்.

 

மேலும் ஒரு சம்பவம் அரியலூர் மாவட்டம் அருகே அடிக்காமலை என்னும் கிராமத்தில் நடந்துள்ளது. இங்கு கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் அய்யனார் மற்றும் மதுரை வீரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 20ஆம் தேதி மர்ம நபர் கோவிலின் பூட்டை உடைத்து கோவிலில் இருந்த பணத்தை திருடிச் சென்றுள்ளார்.

இதுகுறித்து கோவில் நிர்வாகி அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திவந்த காவல்துறையினர் கோவில் அருகில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வீராசாமி என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது கோவில் உண்டியலில் இருந்த இரண்டாயிரம் ரூபாய் பணத்தை கொள்ளை அடித்ததை வீராசாமி ஒப்புக்கொண்டார்.

 

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வீராசாமியை கைது செய்து ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். இது போன்ற தொடரும் கொள்ளை சம்பவங்கள் கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளன. கோவில்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.

Similar News