ஸ்ரீராமர் கோவில் பூமி பூஜையும் கட்டுமானப்பணிகளும்! 2020 ஆம் ஆண்டின் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு.!

ஸ்ரீராமர் கோவில் பூமி பூஜையும் கட்டுமானப்பணிகளும்! 2020 ஆம் ஆண்டின் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு.!

Update: 2021-01-01 05:45 GMT

2020 ஆம் ஆண்டு பல ஆச்சர்யங்களையும், அவலங்களையும் நமக்காக வழங்கியிருக்கிறது. எதிர்பாரா சவால்களை இந்த உலகம் கண்டிராத பெரும் மாற்றத்தை நிகழ்த்தியிருக்கிறது. துரிதமான வாழ்க்கை முறையை சற்று நிதானமடைய செய்திருக்கிறது. ஒவ்வொரு துறைக்கும், ஒவ்வொரு தளத்திற்கும் அதிர்ச்சியையும், சவாலையும் இந்த ஆண்டு வழங்க தவறவில்லை. விதிவிலக்காக சில நன்மைகளும் இந்த ஆண்டில் நிகழ்ந்துள்ளன. அந்த வரிசையில் இந்துக்கள் கொண்டாடும் ஒரு நல்ல செய்தியாக வந்த அமைந்தது அயோத்தி நிலம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு. 

பல நூற்றாண்டு கனவு இன்று கண் முன் கோவிலாக எழத்துவங்கியிருக்கும் வேளையில் கடந்த ஆண்டில் இராமர் கோவிலின் வளர்ச்சி கடந்த வந்த பாதை இங்கே.. 

கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அயோத்தி நிலத்தில் ராமர் கோவில் கட்டி கொள்ளலாம் என தீர்ப்பு வெளியானது. இந்த வழக்கு நடந்த  வேளையில் அனைவரின் கவனம் ஈர்த்தவர் 92 வயது தமிழக மூத்த வழக்கறிஞர் பராசரன். இவர் வழக்கு விசாரணை நடந்த 40 நாட்களும் நின்று கொண்டே தன் வாதத்தை  எடுத்து வைத்தார். வயோதிகம் கருதி அமரலாமே என நீதிபதிகள் கேட்டுக்கொண்ட போதும்  “ராமனுக்காக நிற்பேன். நிற்க இயலாது போனால் நீதிமன்றம் வருவதை நிறுத்துவேன் “ அவர் தெரிவித்த கருத்து மிக நெகிழ்ச்சியான ஒரு தருணத்தை இந்த வழக்கை கூர்ந்து கவனித்தவர்களிடையே ஏற்படுத்தியது. 

இதனை அடுத்து கடந்த 2020 ஜூன் மாதம் 10 ஆம் தேதி, ராமர் கோவில் கட்டுவதற்கான பூஜைகள் முறைப்படி செய்யப்பட்டு, செங்கல்  நாட்டப்பட்டது. மகந்த் கமல் நாயன் தாஸ் உள்ளிட்ட சாதுக்கள் பல சாதுக்கள் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. 

அதனை தொடர்ந்து அதே மாதம் 29 ஆம் தேதியன்று, ராமர் கோவில் கட்டுமான பணியை உத்திரபிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் பார்வையிட்டார். அதன் பின் ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் உறுப்பினர்கள் மற்றும் சாதுக்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். 

அதன் பின் ஆகஸ்ட் 5 அன்று, நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் பூமி பூஜைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. அதிலும் குறிப்பாக 40 கிலோ எடையிலான வெள்ளி செங்கலை பிரதமர் மோடி அடிக்கல்லாக நாட்டினார். அதன் பின் ராம ஜென்ம பூமி சென்று குழந்தை ராமருக்கு பூஜை செய்து, பாரிஜாத மரக்கன்றை அங்கே நட்டு வைத்தார் பிரதமர். 

பிரதமர் அடிக்கல் நாட்டி துவங்கிய பின்னர், அதன் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது. ஆகஸ்ட் 12 அன்று, ராமர் கோவில் கட்டுமான பணியை நிர்வகிக்கும் ஶ்ரீ ராம ஜென்மபூமி தீர்த் ஷேத்ரா புனித நகரில் பிரமாண்ட கோவிலை நிர்மாணிக்க மக்களிடம் நன்கொடை கோரியது. 

அதன் பின் சமீபத்தில் கடந்த டிசம்பரில் வெளியான அறிவிப்பில், ஶ்ரீ ராமர் கோவில் கட்டுமானத்திற்கான பிரச்சாரத்தை வரும் ஜனவரி 15 முதல் 45 நாட்களுக்கு நடத்த ஶ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. இந்த அறக்கட்டளையில் ஒரே தென்னிந்திய பிரதிநிதியாக பெஜாவர் மடத்தின் பீடாதிபதி ஶ்ரீ விஸ்வப்பிரசன்ன தீர்த்த ஸ்வாமிகள் இடம்பெற்றிருக்கிறார். நாடு முழுவதும் உள்ள பல ஹிந்து மத துறவிகளையும் பல சமூக மக்களையும் சந்தித்து ஸ்ரீ ராமர் கோவில் கட்டுமானப்பணிகள் குறித்தும் நிதி திரட்டுவது குறித்தும் விவரித்து வருகிறார்.

ஸ்ரீ ராமர் கோவில் கட்டுமான பணிக்கு 1400 கோடி ரூபாய் மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் பக்தர்களின் பங்களிப்பிற்கே முன்னுரிமை அளிக்கப்பட இருக்கிறது. மேலும் இந்துக்களின் பங்களிப்புடம் புனித அயோத்தி மண்ணில் நம் பாரம்பரியத்தை பறைசாற்றும் பிரமாண்ட ராமர் கோவில் அமையவிருக்கிறது. இந்த புனித பணிக்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் 2020 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டிருப்பது, நாம் சந்தித்த அவலங்களுக்கு இடையே செவியில் விழுந்த ஆனந்தமான நற்செய்தியாக இந்நிகழ்வு அமைந்துள்ளது.

Similar News