தென்னிந்திய கோவில்களில் யானையை வளர்ப்பது ஏன்?

தென்னிந்திய கோவில்களில் யானையை வளர்ப்பது ஏன்?

Update: 2020-11-27 05:55 GMT

மஹாவிஷ்ணுவின் மனைவியான மஹாலட்சுமி மனித குலத்திற்கு செல்வத்தை செளபாக்கியத்தை கொடுப்பவர். இந்து மரபின் படி ஒரு சில அம்சங்களில் இலட்சுமி தேவி வாசம் செய்வதாக சொல்லப்படுகிறது.

இளஞ்சிவப்பு நிறத்திலிருக்கும் தாமரை மலருக்கு இந்து மரபில் மிக அதீதமான முக்கியத்துவம் உண்டு. இந்த தாமரை மலரில் இலட்சுமி வாசம் செய்வதாக சொல்லப்படுகிறது. அதனால் தான் லட்சுமியின் மற்ற பெயர்களாக பத்மினி, பத்மபிரியை போன்றவை சொல்லப்படுகிறது. பத்மம் என்றால் தாமரை என்று பொருள். தாமரையை இலட்சுமி தேவி அதிகம் விரும்புபவராக புராண குறிப்புகள் சொல்கின்றன.

மேலும் மஹாவிஷ்ணு அவர்களுக்கும், மஹாலட்சுமிக்கு தாமரை மாலையை அர்பணிப்பது பெரும் புண்ணியகாரியமாக சொல்லப்படுகிறது. இன்று நாம் இலட்சுமியை வணங்க பயன்படுத்தும் திருவுருவ படங்கள், ஓவியங்கள், சிலை ஆகியவற்றில் கூட இலட்சுமி தேவி தாமரை மலரின் மீது நிற்பது அல்லது அமர்ந்திருப்பது போன்ற வடிவத்தை நம்மால் காண முடியும்.

அடுத்து யானைகளின் நெற்றியில் இலட்சுமி தேவி இருப்பதாகவும் ஒரு கூற்று உண்டு. இன்று நாம் காணும் மஹாலட்சுமி படங்களில் இலட்சுமி தேவிக்கு இருபுறமும் இரு யானைகள் தங்கள் துதிக்கையை உயர்த்தியவாறு இருப்பதை காணலாம். இந்த யானைகளின் நெற்றியில் இலட்சுமி இருப்பதாக சொல்லப்படுகிறது. நம் தமிழகத்தின் கோவில்கள் பலவற்றில் யானையை பேணி வளர்ப்பதை நாம் காண முடியும். மற்றும் பல விதமான ஊர்வலங்கள், உற்சவங்களில் யானையின் ஊர்வலம் இருப்பதை காண முடியும். யானை என்பது இலட்சுமியின் அம்சம். அந்த அம்சம் அனைத்து இடங்களிலும் நிறைந்திருக்க வேண்டும் என்பதாலேயே கோவில்களில் யானைக்கென்று ஒரு தனியிடம் உண்டு.

இந்த காரணத்தினால் தான் இன்றளவும் ஶ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவிலில் அரங்கநாதர் ஒவ்வொரு நாளின் அதிகாலையில் அக்கோவிலின் யானையையே முதலாவதாக பார்ப்பார். அடுத்தாக, மஹாலட்சுமி கோமாதாவிடம் வசிப்பதாக சொல்லப்படுகிறது. இந்து மரபில் அதனால் தான் கோமாதா பூஜை என்பதை பிரத்யேகமாக செய்து வழிபடுகிறோம். புதிதாக கட்டப்பட்ட ஒரு வீட்டில் முதல் வருகையாக இருப்பது ஒரு பசுவின் வரவு தான். அந்த வீட்டில் செல்வமும், வளமும் நிறைந்திருக்க இலட்சுமியே வீட்டினுள் வருவதை ஒத்தது ஒரு பசுவும் அதன் கன்றும் வீட்டினுள் நுழைவது அதனால் தான் கிரஹபிரவேஷத்தின் போது இந்த நிகழ்வு இன்றும் நிகழ்கிறது.

Similar News