ஈரோடு: தி.மு.க கவுன்சிலரின் கணவர், விவசாயி ஒருவரை கடுமையாக தாக்கிய சம்பவம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் உள்ளூர் கட்சி நிர்வாகிகளும், உள்ளாட்சி பிரதிநிதிகளும் பொது மக்களிடம் அதிருப்தியை பெற்று வருகின்றனர். நிலத்தகராறு, நிலம் அபகரிப்பு மற்றும் அரசு அதிகாரிகளை மிரட்டுதல் போன்ற செயல்களில், தி.மு.க உள்ளூர் நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் வரிசையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில், 15வது வார்டு தி.மு.க கவுன்சிலரின் கணவர் முத்துசாமிக்கும் ராஜேந்திரன் என்பவருக்கும் முன்பிருந்தே நிலத்தகராறு இருந்துள்ளது.
இருவரது விவசாய நிலத்திற்கும் பொதுவாக அமைந்துள்ள பாதையில், தி.மு.க கவுன்சிலரின் கணவர் முத்துசாமி கம்பிவேலி அமைக்க முயன்றுள்ளார். அப்போது ராஜேந்திரன் குடும்பத்தினர் முத்துசாமியை கம்பிவேலி அமைக்கவிடாமல் தடுத்துள்ளனர். பின்னர் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றவே, இறுதியில் தி.மு.க கவுன்சிலரின் கணவர் முத்துசாமி தரப்பினர் ராஜேந்திரன் குடும்பத்தினரை சரமாரியாக தாக்கினார்.
இதனால் காயமடைந்த ராஜேந்திரன் குடும்பத்தினர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இச்சம்பவத்தால் கோபிசெட்டிபாளையம் பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.