மாற்றி இடிக்கப்பட்ட வகுப்பறை கட்டடத்தால் மாணவர்கள் அவதி - பல் இளிக்கும் பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகள்

Update: 2022-07-25 06:48 GMT

கடம்பத்தூர் ஊராட்சியில் மாற்றி இடிக்கப்பட்ட அரசு பள்ளி கட்டடத்திற்கு பதிலாக மாற்று கட்டடம் கட்டப்படாமல் இருப்பதால் மாணவர்கள் படிப்பதற்கு இடம் இன்றி மிகவும் சிரமத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். மாணவர்களுக்கு எப்போது விடியல் கிடைக்கும் என்கின்ற கேள்வியும் பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம், வெண்மனம்புதூர் என்ற கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை தமிழ், ஆங்கில வழிக்கல்வியில் 150 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இதில் மூன்று ஆசிரியர்கள் மற்றும் ஒரு தலைமையாசிரியர் என 4 பேர் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த பள்ளியில் வடக்கு புறத்தில் மிகவும் சேதமடைந்து காணப்பட்ட வகுப்பறை கட்டடம் இடித்து அகற்ற, ஒன்றியக் குழுவில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அதன்படி இடிப்பதற்கான கட்டிடத்திற்கு பதிலாக கிழக்கு புறத்தில் உள்ள வகுப்பறைக் கட்டிடத்தை இடித்து தரைமட்டமாக்கினர். இந்த சம்பவம் அங்குள்ள மாணவர்கள் மத்தியில் மட்டுமின்றி பெற்றோர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தற்போது வகுப்பறை கட்டடம் இடிக்கப்பட்டதால் சுமார் 150 மாணவர்களும் வகுப்பறை வராண்டாவிலும், அருகில் உள்ள உயர்நிலைப் பள்ளி விழா மேடை, அங்கன்வாடி, கோயில் வளாகத்திலும் அமர்ந்து படித்து வருகின்றனர். மேலும், மழை, வெயில் சமயங்களில் மாணவர்கள் மிகப்பெரிய இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். வகுப்பறைக் கட்டடம் இடிக்கப்பட்டு 7 மாதங்களை கடந்தும் இன்று வரையில் புதிய கட்டடம் கட்டப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இது பற்றி ஒன்றியக்குழு தலைவர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு கிராம மக்கள் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கல்வித்துறை அதிகாரிகளின் செயலால் மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News