பக்தர்களிடம் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலித்த பேரூர் பேரூராட்சி நிர்வாகம்! எதிர்ப்பு தெரிவித்த இந்துமுன்னணி!
கோவை: ஆடிப்பெருக்கை முன்னிட்டு, பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்திற்கு வருகை தந்த பக்தர்களிடம், வாகன சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டதால் பக்தர்கள் வேதனைக்குள்ளாகினர்.
தமிழகம் முழுவதும் 'ஆடிப்பெருக்கு' விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆடிப்பெருக்கு நன்னாளை சிறப்பாக்க பொதுமக்கள் கோவிலுக்கு சென்று பிரார்த்தனைகள் செய்வது வழக்கம்.
அந்த வகையில் கோயம்புத்தூர் பேரூரிலுள்ள பட்டீஸ்வரர் ஆலயத்திற்கு, அதிக அளவில் பக்தர்கள் இன்று வருகை தந்தனர். இதனைப் பயன்படுத்தி பேரூர் பேரூராட்சி நிர்வாகம், இறைவனை தரிசிக்க வந்த பக்தர்களிடம் இருசக்கர வாகனங்களுக்கு ரூ10, நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ30, என கட்டணம் நிர்ணயம் செய்து சுங்க கட்டணம் வசூலித்தனர். இது கோயிலுக்கு வந்த பக்தர்களை அதிர்ச்சியடைய வைத்தது.
உடனடியாக இச்செய்தி அறிந்த அப்பகுதி இந்து முன்னணி அமைப்பினர், பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, பேரூராட்சி நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
இறுதியில் பேரூர் பேரூராட்சி நிர்வாகம், சுங்க கட்டணம் வசூலிக்கும் முடிவைத் திரும்பப் பெற்றது.