என்ன தான் நடக்கிறது? குளத்தில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க திட்டம் போட்ட அதிகாரிகள்!
சென்னை வண்டலுார் கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர் பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்படுகிறது. கட்டுமான பணிகள் முடிந்த நிலையில், இணைப்பு வசதிகளுக்கான பணிகள் நடக்கிறது.
அரசு பஸ்களும், ஆம்னி பஸ்களும் ஒரே இடத்தில் இயக்கப்படும் வகையில், கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து இயக்கப்படும் ஆம்னி பஸ்களை பராமரிப்பு போன்ற பணிகளுக்காக நிறுத்தி வைக்க முடியும்.
இதற்காக வெளிவட்ட சாலையை ஒட்டி 29 கோடி ரூபாய் செலவில் பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.
கிளாம்பாக்கம் நிலையத்தின் பின்புறத்தில், அயஞ்சேரி - மீனாட்சிபுரம் பகுதியில் நடக்கும் சாலை விரிவாக்க பணிகள் ஜி.எஸ்.டி சாலையில் அமைய உள்ள நடைமேம்பால பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.
அப்போது அரசு செயலர் அபூர்வா மழைக் காலத்தில் வடிகாலாக இருக்கும் இந்த பகுதி பஸ் நிறுத்தம் அமைக்க ஏற்றதாக இருக்காது என்றார்.அருகில் இருந்த அதிகாரிகளும் சுற்றுப்புற பகுதியில் இருந்து வரும் வெள்ள நீர், இங்கிருந்து தான் அடையாற்றுக்கு செல்லும் என்று கூறினர்.
இதனால் கோபம் அடைந்த அமைச்சர் சேகர்பாபு இப்படிப்பட்ட இடத்தை எந்த அடிப்படையில் தேர்வு செய்தீர்கள்? வேறு மாற்று இடம் உள்ளதா? என, சி.எம்.டி.ஏ அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.
வெளிவட்ட சாலையை ஒட்டி சுங்கச்சாவடிக்கு முன் உள்ள இடத்தை, இதற்கு பரிசீலிக்கலாம் என செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் கூறினார்.
எனவே மழை நீர் வடிகால் பகுதியில் சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தேர்வு செய்த இடத்தை மாற்ற அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டார்.
Input From: Dinamalar