கள்ள சாராய பலி எதிரொலி : தி.மு.க பெண் கவுன்சிலர் கணவரை குண்டாஸில் போட்டது போலீஸ்!
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கள்ளச்சாராய பலி சம்பவத்தில் சாராய வியாபாரியான தி.மு.க., பிரமுகர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திண்டிவனம் மது விலக்கு அமல் பிரிவு போலீசார் நத்தமேடு அருகே சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் 105 லிட்டர் எரிசாராயம், 50 சாராய பாக்கெட்டுகள் இருந்தது.
எரிசாராய பாக்கெட்டுகள், அதனை கடத்தி வந்த காரை மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். சாராயம் கடத்தியது திண்டிவனம் தீர்த்தகுளம் ஏரிகோடி தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மகன் மரூர் ராஜா என்கிற ராஜா என்பதை கண்டறிந்தனர்.
அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் திண்டிவனம் தி.மு.க பெண் கவுன்சிலர் ரம்யாவின் கணவர் மற்றும் தி.மு.க., பிரமுகர்.
ஆளும் கட்சியினர் கொடுத்த நெருக்கடியால் ராஜா மீது மேல் நடவடிக்கை எடுக்க போலீசார் தயங்கினர். இப்போது மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 13 பேர் பலியாகினர்.
அதைத்தொடர்ந்து, ஆளும் கட்சி பிரமுகர்கள் ராஜாவை காப்பாற்றுவதாக முன்னாள் அமைச்சர் சண்முகம் நேரடியாக குற்றம் சாட்டினார்.எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியும் அதனை குறிப்பிட்டு விமர்சித்தார்.
இதனால் ஆளும் கட்சிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில், விழுப்புரம் எஸ்.பி மோகன்ராஜ் பரிந்துரையின் பேரில், சாராய வியாபாரி மரூர் ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
Input From: Dinamalar