பூந்தமல்லியில் கடையை காலி செய்யுமாறு மிரட்டிய 5 தி.மு.க நிர்வாகிகள் தலைமறைவு!

Update: 2021-06-30 12:24 GMT
பூந்தமல்லியில் கடையை காலி செய்யுமாறு மிரட்டிய 5 தி.மு.க நிர்வாகிகள் தலைமறைவு!

சென்னை பூந்தமல்லி பகுதியை சேர்ந்த காளியப்பன், அதே பகுதியில் நாவலாடி கொங்குநாடு என்ற பெயரில் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். அவர் தனது உணவகத்தை பார்க்கிங் வசதியுடன் விரிவுபடுத்த எண்ணி அருகில் கோனி வியாபாரம் செய்து வரும் முதியவர் ஜெயேந்திரகுமாரிடம் திமுக நிர்வாகிகள் ஐந்து பேரை அழைத்து வந்து அவருடைய கடையை காலி செய்யுமாறு மிரட்டியுள்ளனர். இந்த செயலால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கத்தி குத்தில் முடிந்தது. இந்த நிலையில் தி.மு.க நிர்வாகிகள் ஐந்து பேர் மீது காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 பூந்தமல்லியை சேர்ந்த காளியப்பன் தனது உணவகத்தை பார்க்கிங் வசதியுடன் விரிவுபடுத்த எண்ணி அருகில் கோனி வியாபாரம் செய்து வரும் 60 வயது முதியவர் ஜெயேந்திரகுமாரிடம் அவரது கடையை விலை பேசியுள்ளார். இதற்கு ஜெயேந்திரகுமார் கடையைத் தர மறுப்பு தெரிவித்ததால், அந்த ஹோட்டல் உரிமையாளர் காளியப்பன் தி.மு.க பூந்தமல்லி ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் கே.ஜி.ஆர். ஸ்டாலினை அணுகியுள்ளார். தனது ஹோட்டல் அருகிலுள்ள கடையை குறைந்த விலைக்கு வாங்கி தருமாறும், அதற்கு கமிஷனாக குறிப்பிட்ட  தொகையைத் தருவதாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து கேஜிஆர். ஸ்டாலின் தலைமையில், காட்டுப்பாக்கம் தி.மு.க வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த பிரகாஷ், தி.மு.க வழக்கறிஞர் அருண் காட்டுப்பாக்கம், 10வது வார்டு மாணவரணி நிர்வாகி நிதிஷ் குமார் உள்ளிட்ட ஐந்து பேர் சென்று முதியவர் ஜெயேந்திர குமாரை கடையை காலி செய்யுமாறு மிரட்டியுள்ளனர். அதற்கும் முதியவர் மறுப்பு தெரிவித்த நிலையில் , கடையை 11 லட்சத்திற்கு வாங்கி கொள்வதாக பேரம் பேசியுள்ளனர்.

இதனை கடை உரிமையாளரான ஜெயேந்திரகுமார் ஏற்றுக் கொண்டுள்ளார். இதையடுத்து முதியவரை நம்ப வைத்து ஏமாற்றி வெத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கி உள்ளனர். முதியவர் ஜெயேந்திர குமார் கையெழுத்து போட்டவுடன் தனக்கு தரவேண்டிய 11 லட்சம் ரூபாயைக் கொடுக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு திமுக நிர்வாகிகள் "நீதான் எங்களுக்கு 11 லட்சம் தர வேண்டும்" என்று மிரட்டி கடையில் உள்ள பொருட்களை சாலையில் தூக்கி எறிந்துள்ளனர். கோபமடைந்த முதியவர் "இப்படி என்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டீர்களே" என்று வாக்குவாதம் செய்து கொண்டிருந்தபோது, தி.மு.க பிரமுகரான நிதிஷ் குமார் அவரைத் தடுத்துள்ளார்.

இதனால் கோபமடைந்த முதியவர் நிதிஷ் குமாரை கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது. கத்தியால் குத்துப்பட்ட நிதிஷ் குமார் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விவகாரத்தில் திமுக நிர்வாகி வேல்பாண்டி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார் மற்றும் நிதிஷை கத்தியால் குத்தியதாக வழக்கு பதியப்பட்டு முதியவர் ஜெயேந்திரகுமார்  கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் தொடர்புடைய ஹோட்டல் உரிமையாளர் காளியப்பன், முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள கே.ஜி.ஆர். ஸ்டாலின் மற்றும் பிரகாஷ், அருண், நிதிஷ் உள்ளிட்ட 5 பேர் மீது பூந்தமல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதை அறிந்த 5 பேரும் தலைமறைவாகி விட்டனர், அவர்களை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

நன்றி : நியூஸ்18 தமிழ்நாடு 

Tags:    

Similar News