தமிழகத்தில் 50,000 அனுமதி இல்லா மொபைல் இணைப்புகள் : சைபர் குற்றம் மூலம் சட்டவிரோத நடவடிக்கை!
சைபர் பாதுகாப்பு இந்தியா என்பது மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தினால் தொடங்கப்பட்ட (MEAITY) முன்னெடுப்பு ஆகும். இது சைபர் குற்றத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், வளர்ந்து வரும் சைபர் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவதற்குப் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்வதற்காகவும், சைபர் தாக்குதல்களைக் கையாள்வதற்குத் தயாராக இருக்க வேண்டும் என்பதற்காகவும் தொடங்கப்பட்டது.
இதன் கீழ் பல திட்டங்களை அரசு முன்னெடுக்கிறது. சைபர் குற்றங்களை தடுப்பதற்காக போலியான, அனுமதியில்லா மொபைல் இணைப்புகளை கண்டறியவும், பகுப்பாய்வு செய்யவும் தொலைத்தொடர்பு சிம் சந்தாதாரர் சரிபார்த்தலுக்கான செயற்கை நுண்ணறிவு மற்றும் முக அங்கீகார முறையை மத்திய அரசின் தொலைத்தொடர்புத்துறை வடிவமைத்துள்ளது.
தமிழ்நாட்டில் 50,000 அனுமதி இல்லா மொபைல் இணைப்புகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து தமிழ்நாடு தொலைத் தொடர்புத்துறை இந்த அனுமதியில்லா மொபைல் இணைப்புகளை தொலைத் தொடர்பு சேவை வழங்குவோர் மூலம் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது.
அந்த இணைப்புகளின் விற்பனை தகவல்கள் தமிழ்நாடு காவல்துறையின் சைபர் குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அனுமதி இல்லா மொபைல் இணைப்புகள் விவகாரத்தில் தொடர்புடைய அனைத்து மோசடிக்காரர்கள் மீது தமிழ்நாடு காவல்துறை தேவையான நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இந்நடவடிக்கைகள் தமிழ்நாட்டில் சைபர் குற்றம் உட்பட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளுக்கான அனுமதி இல்லா மற்றும் போலி மொபைல் இணைப்புகளை தடுப்பதற்கு உதவியாக இருக்கும்.
Input From: telecom note