2,235 ஏக்கர் நிலங்கள் கோயில் பெயருக்கு மாற்றுவதற்கு வருவாய்த்துறையால் காத்திருப்பு!
காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கோயிலுக்கு சொந்தமான 2,235 ஏக்கர் நிலங்கள் கோயில் பெயருக்கு பட்டா மாறுதல் செய்வதற்கு காத்திருக்கிறது. அது போன்று மாறினால் கோயிலுக்கு அதிகப்படியா வருவாய் கிடைத்து இன்னும் பல வசதிகள் செய்யலாம்.
மேலும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 1,300க்கும் மேற்பட்ட கோயில்கள் இருக்கின்றது. இக்கோயிலுக்கு சொந்தமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள், கடைகள், வீட்டு மனைகள் இருக்கிறது.
அனைத்து கோயில்களும் முறையாக பூஜைகள், திருவிழாக்கள் நடத்துவதற்காக இந்த நிலங்கள் வழங்கப்பட்டது. ஆனால் முறையாக பராமரிக்காத காரணத்தால் முறைகேடாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதனை தடுப்பதற்காக கோயில் பெயரில் பட்டா மாற்றம் செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அறநிலையத்துறை கமிஷனர் உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கின்ற கோயில்கள், மற்றும் மடங்களுக்கு, நிலங்கள், மனைகள், கட்டடங்கள் ஏராளமாக இருக்கிறது. அவற்றின் உரிமையாளர் என்பதற்கு சான்றாக வருவாய்த்துறை பட்டாவானது கோயில் பெயரில் இருப்பது அவசியம். ஏராளமான கோயில் நிலங்களுக்கு கோயில் பெயரிலேயே பட்டா இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி சிலர் தங்களது பெயரில் போலி ஆவணங்களை தயாரித்து பட்டா பெற்றுள்ளனர்.
கோயில் நிலங்களை பாதுகாப்பதற்கு ஒரே வழி கோயில் பெயருக்கு உடனடியாக பட்டா பெறுவது அவசியாகும். இதில் பிரச்னை இருக்கும் பட்சத்தில் வருவாய் அலுவலகருக்கு மேல் முறையீடு செய்ய வேண்டும். யாரெல்லாம் பட்டா பெற விண்ணப்பித்த விபரத்தை தெரிவிப்பதோடு, வருவாய்த்துறை அலுவலகர்களை உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும் என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
மேலும், வருவாய்த்துறை மற்றும் அறநிலையத்துறையினர் கோயில் நிலங்கள் எந்தெந்த பகுதிகளில் இருக்கின்றன என்பன பற்றி ஆய்வு செய்கின்ற பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி 150க்கும் அதிகமான ஏக்கர் கோயில் நிலங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அப்பகுதிகளில் அடையாள கற்கள் போடப்பட்டுள்ளது.