கொரோனா அச்சுறுத்தலால் நுழைவுத்தேர்வுகளை நீக்க வேண்டும்:ராமதாஸ்.!

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் அனைத்து வகையான நுழைவுத்தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Update: 2021-06-05 07:09 GMT

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் அனைத்து வகையான நுழைவுத்தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியா முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சி.பி.எஸ்.இ) பாடத்திட்டத்தின்படியான 12&ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருக்கும் நிலையில், மருத்துவம், தொழில்நுட்பப் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு நிறுவனங்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. 12&ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்துவதற்கு சாதகமான சூழல் இல்லாத நிலையில், நுழைவுத்தேர்வுகளை மட்டும் நடத்த முற்படுவது ஏற்க முடியாதது ஆகும்.


 



2021-ஆம் ஆண்டு மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு திட்டமிட்டபடி ஆகஸ்ட் ஒன்றாம் நாள் நடத்தப்படும் என்று தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி எழுப்பப்பட்ட வினா ஒன்றுக்கு தேசிய தேர்வுகள் முகமை விடையளித்திருக்கிறது. ஆகஸ்ட் ஒன்றாம் நாளுக்கு இன்னும் இரு மாதங்களுக்கும் குறைவாகவே இருக்கும் நிலையில், அதற்குள் நீட் தேர்வுக்கு தயாராவது என்பது சாத்தியமே இல்லை. அதுமட்டுமின்றி, மாணவர்களிடையே இன்று நிலவும் மனநிலையில் அடுத்த சில மாதங்களுக்கு அவர்களால் எந்தத் தேர்வையும் எழுத முடியாது என்பதே உண்மையாகும். இதை மத்திய அரசு உணர வேண்டும்.

கொரோனா முதல் அலையை விட இரண்டாவது அலை மிகக் கடுமையாக உள்ளது. நாடு முழுவதும் முதல் அலையில் தினசரி தொற்று எண்ணிக்கை அதிகபட்சமாக 98,000 பேர் என்ற அளவிலேயே இருந்தது. ஆனால், இரண்டாவது அலையில் தினசரி தொற்று எண்ணிக்கை 4.14 லட்சம் பேர் என்ற புதிய உச்சத்தை கடந்த மே மாதம் 6&ஆம் தேதி எட்டியது. அதன்பின் ஒரு மாதமாகிவிட்ட போதிலும் தினசரி கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை சராசரியாக 1.50 லட்சம் பேர் என்ற அளவிலேயே உள்ளது. இது கொரோனா முதல் அலையின் உச்சத்தை விட 150 விழுக்காட்டுக்கும் அதிகம் ஆகும்.

கொரோனா முதல் அலையை விட இரண்டாவது அலை அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. கொரோனா முதல் அலையில் கடந்த பிப்ரவரி மாதம் இறுதி வரையிலான ஓராண்டில் 1.57 லட்சம் பேர் மட்டுமே உயிரிழந்திருந்தனர். ஆனால், இரண்டாவது அலையில் ஏப்ரல், மே ஆகிய இரு மாதங்களில் மட்டும் 1.78 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். ஓராண்டில் இறந்தவர்களை விட, அதிக எண்ணிக்கையில் கடந்த இரு மாதங்களில் மட்டும் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ள நிலையில், உறவுகளை இழந்த மாணவர்கள் எத்தகைய மனநிலையில் இருப்பார்கள் என்பதை மத்திய, மாநில அரசுகள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.


 



கொரோனா பரவல் காரணமாக கடந்த ஓராண்டில் ஒரு நாள் கூட நேரடி வகுப்புகள் நடத்தப்படவில்லை. ஆன்லைன் வகுப்புகளின் தரம் எந்த அளவுக்கு சீராக இருக்கும் என்பது அனைவரும் அறிந்தது தான். மாணவர்கள் மனதளவில் மட்டுமின்றி, கல்வி அளவிலும் எந்தத் தேர்வுக்கும் தயாராகவில்லை. இத்தகைய சூழலில் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எந்தத் தேர்வு நடத்தப்பட்டாலும் அது மனித உரிமை மீறலாகவே அமையும். தேர்வுகளா.... மாணவர்களின் உயிர்களா? என்று பார்த்தால் மாணவர்களின் உயிர்களுக்குத் தான் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். இதை மத்திய, மாநில அரசுகள் உணர வேண்டும்.

எனவே, தேசிய அளவில் சி.பி.எஸ்.இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளும், பல மாநிலங்களில் மாநிலப் பாடத்திட்டத்தின்படியான 12&ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுவிட்ட நிலையில் தமிழ்நாட்டிலும் மாநிலப் பாடத்திட்டத்தின்படியான 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட வேண்டும்; அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப் பட வேண்டும். முந்தைய பருவத் தேர்வுகளின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் மதிப்பெண் அளிக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும்.

தேசிய அளவில் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு உள்ளிட்ட அனைத்து நுழைவுத்தேர்வுகளும் நடப்பாண்டில் ரத்து செய்யப்பட வேண்டும். மாணவர்களுக்கு சம்பந்தப்பட்ட தேர்வு வாரியங்கள் வழங்கியுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில் கலை மற்றும் அறிவியல், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட அனைத்து படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News