மணல் கடத்தல் வழக்கு: கேரள பிஷப், பாதிரியார்களின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!
மணல் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேரள பிஷப் உட்பட 5 பாதிரியார்கள் ஜாமீன்கோரி மனுதாக்கல் செய்த நிலையில் அவர்களின் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி பகுதியில் எம்.சாண்ட் மணல் விற்பனை செய்வதற்கு அனுமதி பெற்றபின்னர் அப்பகுதியில் சட்ட விரோதமாக மணலை கடத்தி விற்பனை செய்தது கண்டுப்பிடிக்கப்பட்ட நிலையில் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் கேரள மாநிலம், பத்தினம்திட்டை டயோசீசன் பிஷப் சாமுவேல் மார்க் இரேனியல் 69, பாதிரியார்கள் ஜார்ஜ் சாமுவேல், ஷாஜி தாமஸ், ஜியோ ஜேம்ஸ், ஜோஸ் சமகாலா, ஜோஸ் கலவியால் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், பிஷப் சாமுவேல் மார்க் இரேனியல், பாதிரியார் ஜோஸ் சமகாலா உள்ளிட்டோர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனிடையே அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் அரசியல் புள்ளிகள் ரகசியமாக சென்று சந்தித்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது.
இந்நிலையில், பிஷப் சாமுவேல் மார்க் உள்ளிட்ட 6 பேரும் ஜாமீன்கோரி நெல்லை முதலாவது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் 6 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து அதிரடியான உத்தரவை பிறப்பித்தது. இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினால் அரசியல் புள்ளிகளும் சிக்க வாய்ப்பிருப்பதாக பேச்சுகள் அடிப்பட்டு வருகிறது.
Source: Daily Thanthi
Image Courtesy: Dinamalar