இந்திய வேளாண் பொருட்களுக்கு வெளிநாட்டில் தேவை உள்ளது: கலெக்டரின் சுவாரஸ்ய தகவல்!
இந்திய வேளாண் பொருட்களுக்கு வெளிநாட்டில் தேவை உள்ளது திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர்
வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் 37-வது நிறுவன தினத்தை முன்னிட்டு உழவர் உற்பத்தியாளர் குழுக்கள், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழில் முனைவோர்களுக்கான ஏற்றுமதி, இறக்குமதி மேம்பாட்டுப் பயிற்சியை திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார். வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குனர் டாக்டர். எஸ்.நடராஜன் ஐ. ஏ.எஸ் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பேசுகையில், திருவள்ளுர் மாவட்டம் வேளாண் ஏற்றுமதியில் தமிழ்நாட்டில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இங்கு நெல், வேர்க்கடலை, காய்கறி மற்றும் பழவகைகள் அதிகமாக பயிரிடப்படுவதும், மேலும் சென்னை துறைமுகம் மிக அருகாமையில் இருப்பதும் ஏற்றுமதிக்கு சாதகமான சூழல் ஆகும் என்றார். புதிய ஏற்றுமதியாளர்களை உருவாக்குவதும், ஏற்றுமதி நிறுவனங்களை ஆய்வு செய்து சான்று வழங்குதலும் "வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் நோக்கமாகும். 2021-2022-ம் ஆண்டு மொத்த ஏற்றுமதி மதிப்பில் 49.5 % அபேடாவின் முக்கியமான தயாரிப்புகள் ஆகும்.
இதில் தானியங்கள் ஏற்றுமதி 52 சதவிகிதம் இருப்பது குறிப்பிடத் தக்கது. 150-க்கும் மேற்பட்ட புவிசார் குறியீட்டு பொருட்களும் அபேடா மூலம் ஏற்றுமதியாகி வருகிறது. மலேசியா, வியட்நாம், தாய்லாந்து போன்ற ஆசிய நாடுகள் மற்றுமின்றி அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளிலும் இந்திய வேளாண் விளை பொருட்களுக்கு உள்ள சந்தையை விவசாயிகள், தொழில் முனைவோர், ஏற்றுமதியாளர்கள் பயன்படுத்தி மேம்படைய வேண்டும். அதேபோல் ஏற்றுமதியாளர்களுக்கான வாகனப் போக்குவரத்து, இடுபொருள் வினியோகம் செய்யும் விவசாயிகளுக்கு மாவட்ட நிறுவனம் சார்பில் வங்கிக் கடன் உள்ளிட்ட அனைத்து உதவிகளும் செய்யப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் உறுதியளித்தார்.
Input & Image courtesy: News