கன்னியாகுமரி: விடிய, விடிய பெய்த மழையால் 150 கிராமங்களை சூழ்ந்த வெள்ளம்!
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் கனமழை கொட்டி வருகிறது. அதே போன்று கன்னியாகுமரி மாவட்டத்திலும் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் கனமழை கொட்டி வருகிறது. அதே போன்று கன்னியாகுமரி மாவட்டத்திலும் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், அந்தமான் கடலில் மீண்டும் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையா காரணமாக மறுபடியும் இரண்டு நாட்கள் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் நேற்று (நவம்பர் 11) மாலை முதல் கன மழை பெய்து வருகிறது. இன்றும் காலை வரை விடிய, விடிய கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. அதே போன்று நாகர்கோவிலில் இன்று (நவம்பர் 12) காலை 6 மணிக்கு மழை பெய்யத் தொடங்கியது. கடந்த 2 இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டித்தீர்த்தது.
இதன் காரணமாக நாகர்கோவில் நகரம் வெள்ளத்தில் மிதக்க தொடங்கியது. தெருவில் ஆறு போன்ற வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சாலையில் சென்ற வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும், மாவட்ட முழுவதும் கொட்டி வரும் கனமழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதனையடுத்து அணையின் பாதுகாப்பை கருதி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக வள்ளியாறு, பழையாறு, குழித்துறை ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது.
மேலும், இரவு முழுவதும் கொட்டித்தீர்த்த கனமழையால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியது. அதில் அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் தெரிசனங்கோப்பு, அருமநல்லூர், நாவல்காடு, தோவாளை, புத்தேரி, இறச்சிகுளம், பூதப்பாண்டி, சுசீந்திரம், தென்தாமரை குளம் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. அங்கு மட்டும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. மேலும், வீடுகளில் உள்ள தொலைக்காட்சி, பிரிட்ஜ், சோபா உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் மழைநீரில் சேதமடைந்துள்ளதாக பொதுமக்கள் கூறியுள்ளனர். உடனடியாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கிராமங்களில் மழைநீரை வெளியேற்றுவதற்கு அரசு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளனர்.
Source: Maalaimalar
Image Courtesy: Ndvt,Deccan Chronicle