கிராம சபைக் கூட்டத்தில் பி.டி.ஓவை செருப்பால் அடித்த பெண் ஊராட்சி துணைத்தலைவர்! - ஏன்?
கிராம சபைக் கூட்டம் நடைபெற்றிருக்கும் போதே மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலரை, ஊராட்சி மன்ற பெண் துணைத்தலைவர் ஒருவர் செருப்பால் அடித்துள்ள சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கண்டமங்கலம் என்ற ஊராட்சியில் மே 1ம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அப்போது மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் சிவகாசி கலியமூர்த்தி, ஊராட்சி செயலர் மற்றும் வேளாண்மைதுறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றிருந்தனர். அப்போது பலர் தங்களின் கோரிக்கைகளை தெரிவித்து வந்தனர்.
அந்த சமயத்தில் கூட்டத்திலிருந்து எழுந்த ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சரண்யா குமார் என்பவர் அனைவரின் முன்னிலையிலும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரனை தனது காலில் இருந்த செருப்பை கழற்றி அடித்தார். இதன் பின்னர் அங்கிருந்து வெளியேற முற்பட்டவரை ஊராட்சி மன்ற அலுவலகத்தின் உள்ளே வைத்து சிறைப்பிடித்தனர்.
இதன் பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளை சமாதானம் செய்தனர். அதன் பின்னர் பெண் ஊராட்சி மன்ற துணை தலைவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். கிராம சபை கூட்டத்தில் அதிகாரிக்கு பெண் ஊராட்சி மன்ற துணை தலைவர் செருப்பால் அடித்த சம்பவம் கடலூர் மாவட்ட அரசு அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Source, Image Courtesy: Vikatan