தமிழகத்திற்கு வந்தடைந்த சொகுசு கப்பல்: இதன் சிறப்பு அம்சம் என்ன தெரியுமா?

சர்வதேச சொகுசு கப்பல் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்திற்கு வருகை.

Update: 2023-01-13 11:24 GMT

எம். எஸ். அமிரா என்ற சர்வதேச சொகுசு கப்பல் சுமார் 698 பயணிகள், 386 கப்பல் பணியாளர்களுடன் 11 ஜனவரி முதன் முறையாக தூத்துக்குடி வ. உ. சிதம்பரனார் துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த பயணிகள் கப்பலானது நைஸ் பிரான்ஸ் நாட்டில் இருந்து 22 டிசம்பர் அன்று புறப்பட்டு மால்டா - எகிப்து - ஓமன் நாடுகள் மார்க்கமாக பயணத்தை மேற்கொண்டு மும்பை துறைமுகத்தை 8, ஜனவரி அன்று வந்தடைந்தது. மேலும் கொச்சி துறைமுகத்திற்கு 10.01.2023 வந்தடைந்து வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தை இன்று வந்தடைந்தது. கப்பல் பயணிகள் பாரம்பரிய முறைப்படி வரவேற்கப்பட்டனர். சுற்றுலா பயணிகள் வருகை மற்றும் புறப்பாடு செயல்பாடுகள் தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்வது மட்டுமல்லாமல் பயணிகள் துறைமுக வருகை மறக்க முடியாத அனுபவமாக இருப்பதற்கான அனைத்து முயற்சிகளும் துறைமுக நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டன.


வ. உ. சிதம்பரனார் துறைமுக ஆணையத் தலைவர் ராமச்சந்திரன், கப்பலின் கேப்டன் கியூபர்ட் வோலோவை நினைவுப் பரிசு வழங்கி வரவேற்றார். அப்போது, தென்தமிழகத்தில் பல்வேறு சுற்றுலா தலங்கள் அமைந்திருப்பதை கருத்தில் கொண்டு, இது போன்ற பயணிகள் கப்பல் வருவதினால் வருங்காலங்களில் பல்வேறு பயணிகள் கப்பல் இயக்குபவர்களுடன் துறைமுகம் இணைந்து தூத்துக்குடிக்கு பல்வேறு சுற்றுலா பயணிகள் வருவதற்கான அனைத்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.


இந்த பயணிகள் கப்பலானது 204 மீட்டர் நீளமும், அதிகபட்சம் 44.8 மீட்டர் காற்று வரைவு, 13 அடுக்குகள் மற்றும் 413 தங்கும் அறைகளுடன், 835 பயணிகளைக் கொண்டு செல்லும் திறன் கொண்டது. இந்த கப்பலில் 3 உணவங்கள், ஓய்வறைகள், நூலகங்கள், விளையாட்டு மற்றும் நீச்சல் குளங்கள் அமைந்திருப்பது சிறப்பம்சம் ஆகும்.

Input & Image courtesy: PIB

Tags:    

Similar News