Kathir Exclusive: தருமபுரி அருகே 4 மாதமாக குடிநீர் வழங்காமல் பழிவாங்கும் ஊராட்சி மன்றத் தலைவர்!
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தொகுதிக்குப்பட்ட செக்கோடி ஊராட்சியில் உள்ள மோட்டுப்பட்டி என்ற கிராமத்திற்கு கடந்த 4 மாதங்களாக ஒகேனக்கல் குடிநீரை வழங்காமல் பழிவாங்கப்படுவதாக அந்த கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தொகுதிக்குப்பட்ட செக்கோடி ஊராட்சியில் உள்ள மோட்டுப்பட்டி என்ற கிராமத்திற்கு கடந்த 4 மாதங்களாக ஒகேனக்கல் குடிநீரை வழங்காமல் பழிவாங்கப்படுவதாக அந்த கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர். செக்கோடி ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் சரஸ்வதி. ஆனால் அனைத்து பணிகளையும் அவரது மகன் நடராஜன்தான் கவனித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கடந்த உள்ளாட்சி தேர்தலின்போது நடராஜனுக்கு மோட்டுப்பட்டி மக்கள் வாக்களிக்கவில்லை என்ற காரணத்தினால் அவர்களுக்கு அடிப்படை தேவையான குடிநீர் இணைப்பை துண்டித்துள்ளார்.
தருமபுரி மாவட்டத்திற்கு ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலமாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. நகரம் முதல் குக்கிராமங்கள் வரைக்கும் குடிநீர் இணைப்புக்கான குழாய் உள்ளது. அதே போன்று செக்கோடி ஊராட்சியிலும் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் இணைப்புக்கான குழாய் இருக்கிறது. செக்கோடி உள்ளிட்ட கிராமங்களுக்கு தினமும் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால் மோட்டுப்பட்டி கிராமத்திற்கு கடந்த 4 மாதங்களாக குடிநீர் வழங்கவில்லை என்று கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக கதிர் செய்திக்காக சென்றிருந்தபோது, மோட்டுப்பட்டி கிராம மக்கள் கூறியதாவது: எங்க கிராமத்தில் 70 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றோம். கடந்த 4 மாதங்களாக குடிநீர் வரவே இல்லை. மழை பெய்ததால் அருகாமையில் இருக்கும் கிணறுகளில் தண்ணீர் நிரம்பியுள்ளது. அதனை எடுத்து வந்துதான் சமையல் மற்றும் கால்நடைகளுக்கான தேவைகளை பூர்த்தி செய்து வருகிறோம்.
கிணற்று தண்ணீரை குடித்து வருவதால் குழந்தைகளுக்கு அடிக்கடி காய்ச்சல், இருமல் உள்ளிட்ட நோய்கள் வருகிறது. இதனால் நாங்கள் குழந்தைகளை அடிக்கடி மருத்துவமனைக்கு அழைத்து சென்று வருகின்றோம். ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலின்போது நாங்கள் ஓட்டு போடாததால் எங்களை தற்போது அவர் பழிவாங்குகின்றனர். இது பற்றி பல முறை புகார் அளித்துள்ளோம். ஆனால் எங்கள் கிராமத்திற்கு தண்ணீர் வந்தபாடில்லை. தண்ணீர் தொட்டிகள் மற்றும் மினி டேங்குகள் காய்ந்த நிலையில்தான் இன்னும் உள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம் என்று கூறினர்.