கோவை: மீண்டும் ஊருக்குள் நடமாடிய பாகுபலி யானையால் விவசாயிகள் அச்சம் !
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் பாகுபாலி காட்டு யானை மீண்டும் உலா வரத்தொடங்கியுள்ளது. இந்த சம்பவம் வனத்துறையினரை மட்டுமின்றி விவசாயிகளிடமும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் பாகுபாலி காட்டு யானை மீண்டும் உலா வரத்தொடங்கியுள்ளது. இந்த சம்பவம் வனத்துறையினரை மட்டுமின்றி விவசாயிகளிடமும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேட்டுப்பாளையத்தை அருகே அமைந்துள்ள புதர் காடுகளில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக முகாமிட்ட ஒற்றை ஆண் காட்டுயானை ஒன்று தினமும் குடியிருப்பு பகுதிகளில் நடமாடியது மட்டுமின்றி விவசாய பயிர்களையும் நாசம் செய்து வந்தது. இதனை தொடர்ந்து பாகுபலி யானையின் கழுத்தில் ரேடியோ காலர் பொருத்தப்பட்டு வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். இதனையடுத்து நிரந்தரமாக வனத்திற்குள் விரட்டவும் நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.
இதற்காக மூன்று கும்கி யானைகள் மேட்டுப்பாளையம் வரவழைக்கப்பட்டு பாகுபலியை சுற்றி வளைக்க பலமுறை முயற்சிகள் நடைபெற்றும், பாகுபலியை பிடிக்க முடியாமல் போனது. இதனை தொடர்ந்து பாகுபலி யானையை பிடிக்கின்ற முயற்சியை வனத்துறையினர் கைவிட்டனர். இதனால் பல நாட்களாக பாகுபலி யார கண்களிலும் சிக்காமல் தலைமறைவான வாழ்க்கை வாழ்ந்து வந்தது.
இந்நிலையில், பாகுபலி யானை திடீரென்று நேற்று இரவு மீண்டும் குடியிருப்பு பகுதிகளின் வழியாக உலா வர தொடங்கியுள்ளது. இந்த சம்பவம் வனத்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகுபலி யானை மேட்டுப்பாளையம் நகரை ஒட்டியுள்ள ஓடந்துறை என்ற இடத்தில் சாலை வழியே தனியாக நடந்து சென்றுள்ளது. அருகாமையில் உள்ள விவசாய நிலத்தில் நுழைய முயன்போது, பட்டாசு வெடித்து வனத்துறையினர் விரட்டியுள்ளனர். இதனால் மீண்டும் வனத்துறையினர் பாகுபலி நடமாட்டத்தை கண்காணித்து வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
Source, Image Courtesy: Puthiyathalamurai