தஞ்சை தேரில் மின்சாரம் பாய புதிதாக போடப்பட்ட தார் சாலையே காரணமா! பொதுமக்கள் கூறுவது என்ன?

Update: 2022-04-27 13:31 GMT

தஞ்சை அருகே களிமேடு என்ற கிராமத்தில் அப்பர் குருபூஜைக்கான சித்திரை திருவிழா தேரோட்டம் நேற்று இரவு (ஏப்ரல் 26) 10 மணியளவில் தொடங்கி அதிகாலை வரையில் நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில், களிமேடு அப்பர் கோயிலின் 94வது ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு திருவிழாவின் ஒரு பகுதியா தேரோட்டம் நடைபெற்றது. தேரை களிமேடு பகுதியில் இருக்கும் தெருக்களில் பக்தர்கள் இழுத்து வந்தனர். அப்போது தேர் கோயில் அருகாமையில் வந்தபோது உயர் மின் அழுத்த கம்பியில் உரசியது. இதில் தேர் முழுவதும் மின்சாரம் பாய்ந்தது. இந்த விபத்தில் தேரை பிடித்தவர்கள் பலர் தூக்கி வீசப்பட்டனர். இதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 10க்கும் மேற்பட்டோர்கள் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது வரையில் 11 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், தேர் விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறும்போது, நேற்று இரவு சுமார் 10 மணியளவில் தேர் கோயிலில் இருந்து புறப்பட்டு ஊரை சுற்றி வந்தது. அதன் பின்னர் மீண்டும் தேர் கோயிலை நோக்கி வந்தபோது சாலைக்கு மேல் உயர்மின்சார கம்பி இருந்தது.

சில மாதங்களுக்கு முன்னர் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்றது. அதன்படி புதிய சாலை ஒன்றரை அடிக்கு மேல் உயர்த்தப்பட்டது. இதனால் தேரை சரியாக இழுத்து வரமுடியால் தடுமாறியது. அப்போது சாலையின் மேல் சென்றுகொண்டிருந்த உயர்மின் அழுத்த கம்பியின் மேல் உரசியது. இதில் தேரை பிடித்திருந்தவர்கள் ஜெனரேட்டரை இயக்கி வந்த ஆபரேட்டர் மற்றும் அதன் மேல் அமர்ந்திருந்தவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்டு 10 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். மேலும், இந்த விபத்துக்கு முக்கிய காரணமே புதிதாக போடப்பட்ட தார் சாலைதான். இவ்வாறு பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

Source: News 18 Tamilnadu

Image Courtesy:Zee News

Tags:    

Similar News