தி.மு.க. ஆட்சியின் அவலம்: பி.டி.ஓ அலுவலக வாசலில் நெல்லை கொட்டி விவசாயிகள் போராட்டம்!
திருநெல்வேலி மாவட்டம், மானூரில் நெல் கொள்முதல் நிலையம் ஏற்கனவே இயங்கி வந்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது நெல் அறுவடை சமயங்களில் கொள்முதல் நிலையங்களில் மூட்டைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வந்தனர். அதன்படி மானூர் பகுதியை சுற்றியுள்ள எட்டான்குளம், களக்குடி, பள்ளமடை, நாஞ்சான்குளம், ரஸ்தா உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மானூரில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்துக்கு எடுத்து வந்து விற்பனை செய்து பயனடைந்தனர்.
இந்நிலையில், தற்போது நெல் அறுவடை சீசன் தொடங்கியுள்ள நிலையில் மானூரில் செயல்பட்டு வந்த நெல் கொள்முதல் நிலையம் திடீரென்று பூட்டப்பட்டது. அதன் பின்னர் திறக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் மாற்று ஊரில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களுக்கு செல்வதற்கு பணிச்சுமையும், வாகனம் வசதியும் தேவைப்பட்டது.
இதனால் கொதித்தெழுந்த விவசாயிகள் மீண்டும் மானூரில் கொள்முதல் நிலையம் திறக்கப்பட வேண்டும் என்று நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது நெல்களை கொண்டுவந்து மானூர் பிடிஓ அலுவலக வாசலில் கொட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். உடனடியாக நெல் கொள்முதல் நிலையங்களை திறப்பதற்கு திமுக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
Source, Image Courtesy: Daily Thanthi