வாஞ்சிநாதனுக்கு நினைவுச்சின்னம் கூட இல்லை: வெள்ளக்காரன் ஆஷ்துரையின் மண்டபம் சீரமைப்பா? - என்ன செய்ய போகிறது அரசு?

Update: 2022-07-20 13:04 GMT

வாஞ்சிநாதனுக்கு மணியாச்சியில் ஒரு நினைவு மண்டபமோ, சின்னமோ நிறுவப்படவில்லை. ஆனால் வ.உ.சி.க்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கிய ஆஷ்துரைக்கு தூத்துக்குடியில் நிறுவப்பட்டுள்ள நினைவு மண்டபத்தை மாநகராட்சி நிர்வாகம் புதுப்பித்து வருவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டு கொண்டிருந்தபோது திருநெல்வேலி மாவட்டத்தின் ஆட்சியராகவும், நீதிபதியாகவும் இருந்தவர் ராபர்ட் வில்லியம் எஸ்கோர்ட் டிஸ்கவர் ஆஷ். இவரை ஆஷ்துரை என்றே அனைவரும் அழைத்து வந்தனர். சுதந்திரத்திற்காக போராடியவர்களை மிக கடுமையான முறையில் நடவடிக்கை மேற்கொண்டார். அப்பாவி மக்கள் மீது கடுமையான ஒடுக்குமுறைகளைக் கையாண்டார். மேலும், சுதந்திரத்திற்காக போராட்டத்தை முன்னெடுத்த வ.உ.சிதம்பரனாருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் வழங்க காரணமாக இருந்தவர் ஆஷ்துரை. வ.உ.சி.க்கு சிறையில் அடைக்கப்பட்டத்தை கேள்விப்பட்ட செங்கோட்டையைச் சேர்ந்த வாஞ்சிநாதன் ஆவேசமடைந்தார்.

இதனிடையே கடந்த 1911ம் ஆண்டு ஜூன் 17ம் தேதி காலை 10.30 மணிக்கு தன்னுடைய மனைவியுடன் சுற்றுலாவிற்காக கொடைக்கானல் செல்வதற்காக ரயிலில் ஆஷ்துரை கிளம்பினார். அப்போது ரயில் மணியாச்சி ரயில் நிலையம் வந்தபோது, ஆஷ்துரையை அங்கு மறைந்திருந்த வாஞ்சிநாதன் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தார்.

மேலும் தன்னை ஆங்கிலேய போலீசார் சுற்றி வளைத்ததை உணர்ந்த வாஞ்சிநாதன் தன்னையே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை தொடர்ந்து மேலும், சுதந்திரப் போராட்டம் தீவிரமடைந்தது.

இந்நிலையில், நாட்டிற்காக தனது உயிரையை விட்ட வாஞ்சிநாதனுக்கு இன்று வரையில் மணியாச்சி ரயில் நிலையம் அருகில் நினைவு மண்டபமோ, நினைவுச் சின்னமோ அமைக்கப்படவில்லை. இதன் பின்னர் பொதுமக்களின் பலகட்ட போராட்டங்களுக்கு இடையில் மணியாச்சி ரயில் நிலையத்திற்கு வாஞ்சி மணியாச்சி என்ற பெயர் சூட்டப்பட்டது. ஆனால் ஆங்கிலேயர் ஆட்சியராக இருந்த ஆஷ்துரைக்கு பழையதுறைமுகம் எதிர்புறத்தில் 16 ஸ்தூபிகள் 8 தூண்களுடன் எண்கோன அமைப்பில் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டது. நாட்கள் செல்ல, செல்ல புல்புதர் சூழ்ந்த மண்டபமாக காட்சி அளித்தது. சில காலம் தனியார் கல்லூரி நிர்வாகம் இந்த இடத்தை பராமரித்து வந்தது.

இந்நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் பல லட்சம் செலவு செய்து ஆஷ்துரையின் நினைவிடத்தை புதுப்பித்து வருகிறது. இதனை கண்ட சமூக ஆர்வலர்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். சுதந்திரத்திற்காக போராடி தனது உயிரை விட்ட வாஞ்சிநாதனுக்கு ஒரு சிலை கூட நிறுவவில்லை. ஆனால் வெள்ளக்காரனின் மணிமண்டபத்தை புதுப்பிப்பதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Source, Image Courtesy: Vikatan

Tags:    

Similar News