திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் வாசலில் கெட்டுப்போன உணவுப் பொட்டலங்களை விற்ற வியாபாரிகள் !
திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் என்பது சனி பகவானுக்குரிய கோயிலாகும். பக்தர்கள் தங்களுக்கு ஏற்பட்ட தோஷங்களுக்கு பரிகாரங்களை தீர்ப்பதற்காக இக்கோவிலுக்கு வருகை தருவர்.
அவர்களது பரிகாரங்களில் மிக முக்கியமானது அன்னதானம், பக்தர்கள் தங்களது உணவுகளை யாசகர்களிடம் வழங்குவதே பரிகாரத்தின் நோக்கமாகும். மக்களின் தேவையை அறிந்து கோயில் அருகே சிறு சிறு கடை வியாபாரிகள் உணவு பொட்டலங்களை தயாரித்து விற்று வருகின்றனர்.
இந்நிலையில் அக் கடைகளில் கெட்டுப்போன உணவு பொட்டலங்கள் விநியோகிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரி ரவிச்சந்திரன் தலைமையில் திடீர் ஆய்வு நடந்தது. அப்பொழுது கடை வியாபாரிகளிடம் இருந்த உணவு பொட்டலங்களை ரவிச்சந்திரன் ஆய்வு செய்தார். அப்போது உணவுகள் மிகுந்த கெட்ட நிலையில் இருப்பதை அறிந்த ரவிச்சந்திரன் கடை உரிமையாளர்கள் இடமே உணவை உண்ணுமாறு கூறினார். ஆனால் அதற்கு அவர்கள் தயங்கி நின்றனர்.
"இனி இக்கடைகளில் திடீர் ஆய்வுகள் நடத்தப்படும்" என்று செய்தியாளர்களிடம் உணவு பாதுகாப்பு அதிகாரி ரவிச்சந்திரன் கூறினார். கோயில் அருகிலேயே இப்படிப்பட்ட கொடூரங்கள் அரங்கேறுவது தமிழக ஆன்மீகவாதிகள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.