திருப்பூர் அருகே கோயில் நிலத்தை முறைகேடாக விற்பனை செய்தும், திருக்கோயிலையே சிதைக்க சதி செய்தது அம்பலம்!

திருப்பூர் மாவட்டம், அவினாசி வட்டத்தில் அமைந்துள்ள ராமநாதபுரம் என்ற கிராமத்தில் உள்ள அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயில் நிலத்திற்குள் அத்துமீறி நுழைந்து ஆக்கிரமிப்பு செய்த மின்சார வாரியத்திற்கு துணைபோன அறநிலையத்துறை அதிகாரிகள் பற்றிய திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகியுள்ளது.

Update: 2021-11-17 05:48 GMT

திருப்பூர் மாவட்டம், அவினாசி வட்டத்தில் அமைந்துள்ள ராமநாதபுரம் என்ற கிராமத்தில் உள்ள அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயில் நிலத்திற்குள் அத்துமீறி நுழைந்து ஆக்கிரமிப்பு செய்த மின்சார வாரியத்திற்கு துணைபோன அறநிலையத்துறை அதிகாரிகள் பற்றிய திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், அவினாசி வட்டம், வடுச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் மு.கார்த்திகேயன். இவர் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலத்தை முறைகேடாக விற்பனை செய்தது தொடர்பாக ஆளுநருக்கு புகார் மனு ஒன்றை எழுதியுள்ளார். 


அவர் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: திருப்பூர் மாவட்டம், அவினாசி நரியம்பள்ளி பகுதியில் உள்ளது. பழமையான திருக்கோயில் அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயில் ஆகும். இந்த திருக்கோயிலுக்கு சொந்தமான ராமநாதபுரம் கிராமத்தில் இருந்த க.ச.எண் 154ல் உள்ள 11.40 ஏக்கர் நிலத்தில் 10 ஏக்கர் நிலத்தை கடந்த 05.04.2013ல் தமிழ்நாடு மின்சார வாரியம் 230/11கேவி கருவலூர் துணை மின் நிலையம் அமைக்க இந்து சமய அறநிலையத்துறை விற்றுவிட்டது.


மேற்படி திருக்கோயிலின் தக்கார் தீர்மானப்படியும் சரக உதவி ஆணையரின் பரிந்துரையின்படியும் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சட்ட பிரிவு 34இன் கீழ் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு விற்பனை செய்திடவும் விதிகளின்படி உரிய நடவடிக்கை எடுக்கவும் அரசு கடித (நிலை) எண் 210 தமிழ் வளர்ச்சி அறநிலையங்கள் மற்றும் செய்தித்துறை நாள் 30.09.2011 இல் (அநி 52) அரசின் இசைவாணை பெறப்பட்டுள்ளது. நில விற்பனை தொடர்பாக அறிவிப்பு 18.11.2011 அன்று தினத்தந்தி நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 30.11.2011இல் ஆணையர் அவர்களால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு திருப்பூர் மாவட்ட அரசிதழில் உத்தரவு எண் 10 டிசம்பர் 27.2012ல் நில விற்பனை தொடர்பாக பொது அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 


05.04.2013ல் அவிநாசி சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திர எண் 3769/13ல் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக தக்கார் நரியம்பள்ளி வரதராஜ் பெருமாள் திருக்கோயில் திரு சி.சி. சரவணபவன் அவர்களும் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக மேற்பார்வை பொறியாளர் திருப்பூர் மின் பகிர்மான் வட்டம் திருமதி சோ நிர்மலா அவர்களும் கிரைய பத்திரத்தில் கையொப்பமிட்டு கிரயம் நடைபெற்றுள்ளது. இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை ஆணையர் நிர்ணயம் செய்த கிரைய தொகை ரூபாய் 1.51.96.200 கருவலூர் கனரா வங்கி வரைவோலை நம்பர் 993509 நாள் 13.02.2013படி 04.04.2013 அன்று வரதராஜ பெருமாள் திருக்கோயில் நரியம்பள்ளி தக்கார் சார்பாக திரு சி.சி.சரவணபவன் அவர்களால் பெறப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் கிராமத்தில் க.ச.எண் 154ல் அமைந்துள்ள 230/11 கேவி கருவலூர் துணை மின் நிலையம் 31.03.2009 அன்று முதல் செயல்பட்டு வருகிறது. மேற்படி இடம் திரு.சு.ரவிக்குமார் உதவி செயற்பொறியாளர் வடக்கு அன்னூர் அவர்களால் இடம் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் மேற்படி திருக்கோயில் நிலம் 05.04.2013 அன்றுதான் இந்து சமய அறநிலையத்துறையால் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு விற்கப்பட்டுள்ளது.

மேற்படி கோயில் நிலத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் 31.03.2009 செயல்பட்டு வரும் நிலையில் இந்து சமய அறநிலையத்துறை மேற்படி திருக்கோயில் நிலம் பத்திரப்பதிவு 05.04.2013 செய்யும் வரை திருக்கோயில் சுவாதினத்தில் தான் இருந்தது குத்தகை, வாடகை ஏதும் வசூல் செய்யப்படவில்லை என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

மேற்படி கோயில் நிலம் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்ததாக கூறப்படும் நிலையில் அதற்கு முன்னதாகவே தமிழ்நாடு மின்சார வாரியம் 31.03.2009ம் ஆண்டு முதல் மின்சார வாரியம் செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. எனவே இருவேறு முரண்பட்ட தகவல்களால் பல முறைகேடுகள் நடந்ததாக தெரியவருகிறது. தமிழ்நாடு மின்சார வாரியம் அத்துமீறி நுழைந்து, சட்டவிரோதமாக திருக்கோயில் நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்து செயல்பட்டு வருவதாகவும் இதற்கு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் உடந்தையாக இருந்ததாகவும் தெரியவருகிறது. எனவே உரிய உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கையும் முறைகேடான முறையில் நடைபெற்ற பத்திரப்பதிவை ரத்து செய்யவும் கோயில் நிலத்தை மீட்டு கோயிலுக்கு ஒப்படைக்கவும் தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

கோயில் நிலத்தை விற்பனை செய்து பெறப்பட்ட தொகையிலிருந்து இதுவரையில் கோயிலுக்கு எந்த ஒரு புனரமைப்பு பணியும் செய்யாமல் இந்து சமய அறநிலையத்துறை செயல்பட்டு வருகிறது. கோயில் பாழடைந்த நிலையில் ஒரு சிறிய அறையில் உள்ளது. இவ்வாறு அவர் ஆளுநருக்கு அனுப்பிய புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் அவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் சில தகவல்களை கேட்டு பெற்றத்தில் முறைகேடுகள், விதிமீறல்கள் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

(1) 25.06.2021 ம் தேதியிட்ட பொது தகவல் அலுவலர், தமிழ்நாடு மின்சார வாரியம் , அவினாசி அவர்களின் கடிதத்தில் ,

ஸ்ரீவரதராஜ பெருமாள் திருக்கோவில் நிலத்தில் (க.ச.எண் 154) (10 ஏக்கர்) தமிழ்நாடு மின்சார வாரியம் 31.03.2009ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது எனவும் 1,51,96,500 ரூபாய்க்கு தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு 5.4.2013 ஆம் கிரையம் நடைபெற்றுள்ளது தெரிய வருகிறது.

03.09.2021 ம் தேதியிட்ட இணை ஆணையர் அலுவலகம், இந்து சமய அறநிலைத்துறை, திருப்பூர் அவர்களின் பதில் கடிதத்தில் தகவல் 10ல் திருக்கோயில் நிலம் பத்திரப்பதிவு செய்யும் வரை அதாவது 5.4.2013 வரை திருக்கோயில் சுவாதீனத்தில் தான் இருந்துள்ளது எனவும் வாடகை குத்தகை எதுவும் பெறப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியம் திருக்கோயில் நிலத்தில் 31.03.2009 முதல் செயல்பட்டு வரும் நிலையில் 05.04.2013 வரை திருக்கோயில் நிலத்தில் அத்துமீறி நுழைந்து செயல்பட்டுள்ளது தெரிய வருகிறது. இதற்கு உடந்தையாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இருந்ததும் இதன் மூலம் வெளிப்படுகிறது.

(2) 02.07.2021 தேதியிட்ட உதவி ஆணையர் அலுவலகம், இந்து சமய அறநிலையத்துறை, திருப்பூர் அவர்களின் கடிதத்தில் பதில் எண் 6ல் எந்த தேதியில் இருந்து நரியம்பள்ளி அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது என்கிற விபரம் திருக்கோயில் அலுவலகத்தில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே கடிதத்தில் அலுவலக உதவியாளர் ஒருவருக்கு மாதம் ரூ.9000 சம்பளம், பகுதி நேர ஊழியர் ஒருவருக்கு ரூ.1500 சம்பளம் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்கள். கருவலூர் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் செயல் அலுவலர் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த கோயிலுக்கு எந்த ஆவணங்களும் முறையாக பராமரிக்கப்படவில்லை. தணிக்கை செய்யப்படவில்லை. ஆனால் இரண்டு ஊழியர்களை பணி நியமித்து சம்பளம் எடுத்துவருகிறார்கள். ஒரு கால பூஜை மட்டுமே நடைபெறும் அருள்மிகு வரதராஜ பெருமாள் கோயிலுக்கு எதற்காக இரண்டு ஊழியர்கள் என்கிற கேள்வியும், கருவலூர் மாரியம்மன் கோயில் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்களால் இந்த கோயில் பதிவேட்டை பராமரிக்க முடியாதா என்கிற சந்தேகமும் எழுகிறது. எதற்காக இரண்டு ஊழியர்கள் என தெரியவில்லை. ஒரே ஊழியருக்கு இரண்டு சம்பளம் வழங்கப்படுகிறதா என்பதையும் கண்டறிய உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.

(3) பொது தகவல் அலுவலர், தமிழ்நாடு மின்சார வாரியம், அவிநாசி அவர்களின் 25.10.2021ம் தேதியிட்ட கடிதத்தில் 31.03.2009ம் தேதி முதல் தமிழ்நாடு மின்சார வாரியம் ராமநாதபுரம் கிராமம் நரியம்பள்ளி வரதராஜ பெருமாள் கோயில் நிலம் 10 ஏக்கரில் க.ச. எண் 154 ல் கருவலூர் துணை மின் நிலையம் செயல்பட்டு வருவதாகவும் 05.04.2013ம் தேதி அன்று கிரையம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

31.03.2009 முதல் 05.04.2013 வரை எவ்வித அனுமதியும் இன்றி தமிழ்நாடு மின்சார வாரியம் அவிநாசி வட்டம் ராமநாதபுரம் கிராமம் நரியம்பள்ளி அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயில் நிலம் க.ச எண் 154ல் 10 ஏக்கர் நிலத்தில் எவ்வித அனுமதியும் இன்றி செயல்பட்டு வந்தது இதன் மூலம் தெரிய வருகிறது. இதற்கு இந்து சமய அறநிலை துறை அதிகாரிகளும் உடந்தையாக இருந்ததாக கருத முடிகிறது.

(4) 03.09.2021ம் தேதியிட்ட இணை ஆணையர் அலுவலகம், இந்து சமய அறநிலைத்துறை, திருப்பூர் அவர்களின் பதில் கடிதத்தில் நரியம்பள்ளி அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயிலுக்கு சொந்தமான நிலம் விற்பனை செய்யப்பட்ட தொகை முதலீடு செய்யப்பட்டு அதன் மூலம் ஆண்டுக்கு 16 லட்சம் ரூபாய் வருவாய் கிடைப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

திருக்கோயிலின் தற்போதைய நிலையை நேரில் பார்க்கும்போது கோயில் நிலம் விற்பனை செய்யப்பட்டதில் 1 ரூபாய் கூட திருக்கோவில் வளர்ச்சிக்காக செலவு செய்யப்படவில்லை என தெரிய வருகிறது. எனவே திருக்கோயில் நிலத்தை திட்டமிட்டு முறைகேடாக விற்பனை செய்தது மட்டும் இல்லாமல், திருக்கோயிலையும் சிதைக்க முயற்சி நடப்பதாக பக்தர்களாகிய நாங்கள் கருதுகிறோம். முறைகேடாக விற்பனை செய்யப்பட்ட திருக்கோயில் நிலத்தை மீட்கவும், திருக்கோயிலுக்கு சொந்தமான பணத்தை கோயில் வளர்ச்சிக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.


Tags:    

Similar News