எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களை தத்தெடுக்க யோகி அரசு உத்தரவு! தமிழகத்தில் நடக்குமா?
உத்தரபிரதேச மாநில எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நாடாளுமன்ற எம்.பி-கள் அவர்கள் தொகுதியிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சமூதாய கூடங்களை தத்தெடுத்து அவற்றை மேம்படுத்த வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
தற்போது உத்தர பிரதேசத்தில் கொரோனா இரண்டாவது அலை பாதிப்புகள் மெல்ல குறையத் தொடங்கியுள்ளது. இருந்தபோதிலும் மூன்றாவது அலையை சமாளிப்பதற்காக மருத்துவ கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் தங்கள் தொகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்துவதற்காக அந்தந்த தொகுதியைச் சேர்ந்த எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் சமுதாய கூடங்களை தடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
முதல்வர் மற்றும் கொரோனா தடுப்பு குழுவில் இடம்பெற்றுள்ள 9 பேர் அடங்கிய குழுவின் முக்கிய சந்திப்பின்போது பேசிய முதலமைச்சர், சுகாதார நிலையங்களை பழுது பார்ப்பது போன்ற நடவடிக்கைகளில் உடனடியாக ஈடுபடவேண்டும் என்றும், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான உட்கட்டமைப்பு மற்றும் உபகரணங்களை ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொருத்த வேண்டும் என்று முதல்வர் கூறினார்.
கிராமங்களில் இருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எம்.பி-க்கள் இணைந்து இந்த நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். 'ஆபரேஷன் காயகல்ப்' என்று நடவடிக்கையின் மூலம் ஆரம்ப பள்ளிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை போல் ஆரம்ப சுகாதார நிலையங்களையும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். மேலும் மாநிலத்தில் அதிகரித்து வரும் கருப்பு பூஞ்சை நோய்க்கு எதிராகவும் மருத்துவ உள்கட்டமைப்பு தயார்படுத்தி வைத்திருக்குமாறு முதல்வர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கொரோனா இரண்டாவது அலையை பற்றி பிரதமர் எச்சரிக்கை விடுத்தும் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காததால் பல உயிர் இழப்புகளை சந்திக்க நேரிட்டது. ஆனால் தற்போது மூன்றாவது அலையை சமாளிப்பதற்காக இதுபோன்ற நடவடிக்கைகளை அனைத்து மாநில அரசுகளும் குறிப்பாக தொற்று அதிகமாக பாதிக்கப்படும் தமிழக அரசு மேற்கொள்ளுமா என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.