குஜராத்திற்கு அதிக எண்ணிக்கையில் தடுப்பூசிகள் வழங்கப்படுவதாக தமிழக சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதில் தவறில்லை. ஆனால் அவர் மே 18 அன்று வரை தங்களுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசிகள் பெரும்பாலானவற்றை பயன்படுத்தியது போக 11,25,236 டோஸ்களை மட்டுமே இருப்பில் வைத்திருந்தது என்பதை மறைத்து விட்டார். குஜராத் தடுப்பூசி போடும் பணியில் மிகத்தீவிரமாக ஈடுபட்டு வருகிறது என்பதையும் எனவே மிகக் குறைவான அளவிலேயே தடுப்பூசிகளை வீணாக்குகிறது என்பதையுமே இது காட்டுகிறது. இதனால்தான் குஜராத்துக்கு அதிக அளவில் தடுப்பூசிகள் ஒதுக்கப்படுகின்றன.
ஆனால் நாட்டிலேயே அதிகபட்சமாக தடுப்பூசிகளை வீணாக்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருக்கிறது. மே 17 அன்று நிலவரப்படி ஒதுக்கப்பட்ட தடுப்பூசிகளில் 10% டோஸ்களை தமிழ்நாடு வீணாக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஒதுக்கப்பட்ட 77.89 லட்சம் டோஸ்களில் 69.63 டோஸ்கள், அதாவது 90%, மட்டுமே மக்களுக்கு செலுத்தப்பட்டன. பத்திரிகைகளில் வெளியான தரவுகளின் படி ஜார்க்கண்ட் (37.3%) மற்றும் சட்டீஸ்கர் (30.2%) மாநிலங்களுக்கு பிறகு தமிழகத்தில் தான் 15.5% அதிக அளவில் தடுப்பூசிகள் வீணாக்கப்படுகின்றன. பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தடுப்பூசி வீணாக்கப்படுவது மிக அதிகமாக இருப்பதாகவும் தரவுகள் கூறுகின்றன.
இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும்போது தடுப்பூசி பற்றாக்குறை அல்ல, தடுப்பூசி போட்டுக்கொள்ள இருக்கும் தயக்கம் என்பது தெளிவாக தெரிகிறது. இந்த தயக்கம் அனைத்தும் பொறுப்பற்ற முறையில் பேசிய அரசியல்வாதிகள் மற்றும் பொறுப்பற்ற முறையில் செய்தியை வெளியிட்ட செய்தி நிறுவனங்களுமே ஆகும்.
தமிழகத்தில் தடுப்பூசிகள் இருந்தும் அவற்றை போடாமல் இருப்பதும் அதிக அளவில் வீணடிப்பதும் ஏன்? தடுப்பூசிகளை பற்றி சந்தேகங்களையும் பொய்யான தகவல்களையும் மக்கள் மனதில் விதைத்த பொறுப்பற்ற அரசியல்வாதிகளும் ஊடகங்களும் தான்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் தரத்தைப் பற்றி கேள்வி எழுப்பியதில் தொடங்கி, நடிகர் விவேக் இறந்தபோது அதை வைத்து தடுப்பூசி மீதான அச்சத்தை அதிகரித்தது வரை மக்கள் தடுப்பூசி போட தயங்குவதற்கு காரணமான அரசியல்வாதிகள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் சமூக ஊடக பிரபலங்கள் ஆகியோரின் பட்டியல் இங்கே.
மு.க.ஸ்டாலின்
மதுரவாயலில் ஒரு கிராமசபை கூட்டத்தில் பேசிய தற்போதைய தமிழக முதல்வரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின்,
"இந்த நோய்க்கு மருந்து உண்டானு தெரியாது. இப்போ தடுப்பூசி அப்படின்னு ஒன்னு வந்துகிட்டு இருக்கு. அது எந்த அளவுக்கு 100% சக்சஸானு தெரியாது. இன்னும் முக்கியமாக பிரதமரும் போட்டுக்கல, முதலமைச்சரும் போட்டுக்கல. சில டாக்டர்ஸ் போட்டுக்கறாங்க, ஒரு சில குறிப்பிட்டவங்க போட்டு இருக்காங்க . ஏன்னா இது டெஸ்ட் மாதிரித்தான் இப்போது." என்று பேசினார்.
தயாநிதி மாறன்
நாடாளுமன்றத்தில் பேசிய எம்.பி தயாநிதிமாறன் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை தயாரிக்கும் நிறுவனங்கள் சரியான வழிமுறைகளையும் சோதனைகளையும் பின்பற்றவில்லை என்று பேசி தடுப்பூசிகளின் செயல் தன்மை குறித்தும் சந்தேகம் எழுப்பினார்.
மற்றொரு சமயத்தில் தடுப்பூசி எந்த அளவுக்கு பயனளிக்கும் என்று மக்கள் மனதில் சந்தேகம் ஏற்பட்டிருப்பதாகவும் எனவே பிரதமர் அனைவர் முன்னிலையிலும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் பேசினார்.
திருமாவளவன்
வி.சி.க தலைவர் திருமாவளவன் இதுபோன்று கொரோனா தடுப்பூசிகள் மீது அச்சத்தை விதைக்கும் விதமாக தொடர்ந்து பேசினார். தனது ட்விட்டர் பதிவில் நடிகர் விவேக்கின் இறப்பு பல கேள்விகளை எழுப்பி உள்ளதாகவும் தடுப்பூசி போட்ட பின்னரே விவேக் சுயநினைவு இழந்த தான் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் தமிழக அரசு கோவேக்சின் தடுப்பூசியை பயன்படுத்தக்கூடாது என்றும் தடுப்பூசி தயாரித்து வரும் இந்திய நிறுவனங்கள் மக்களை சோதனை எலிகளாக பயன்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.
ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தான் தடுப்பூசிக்கு எதிரானவன் இல்லை என்றும் தானே கோவிஷீல்டு தடுப்பூசியின் 2 டோஸ்களை செலுத்திக் கொண்டதாகவும் கூறிவிட்டு தடுப்பூசிகளை பற்றி பல ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் வைத்துள்ளார். நடிகர் விவேக் போன்றோரின் மரணத்தை வைத்து அரசியல் செய்து விட்டு மக்கள்தான் தடுப்பூசியை நினைத்து அச்சம் கொள்கிறார்கள் என்றும் அந்த அச்சத்தைப் போக்க வேண்டியது அரசின் கடமை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் எய்ம்ஸ் மருத்துவர்களே தடுப்பூசி போட்ட பின்னர் மாரடைப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறுவதாகவும் அவர் பேசியதை வைத்து மக்கள் மனதில் தடுப்பூசியை பற்றிய அச்சத்தை ஏற்படுத்தியது யார் என்று தெளிவாக புரிந்து கொள்ளலாம்.
சீமான்
அடுத்து நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், ஜனவரி மாதம் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த போது உலகம் முழுவதும் உள்ள தனது மருத்துவ நண்பர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தியதாக கூறினார். "கொரோனா காலரா அல்லது பெரியம்மை போன்றது அல்ல. இந்த வைரஸ் மாற்றம் (மரபணு) அடைந்து கொண்டே இருக்கிறது. அப்படி என்றால் இந்த தடுப்பூசி எதற்கு? அரசியலுக்காக இப்படி செய்து கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் சொல்கிறேன் உங்களது குழந்தைகளுக்கு தடுப்பூசி போடாதீர்கள். அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் உள்ள பல பிரபல மருத்துவர்களை எனக்கு தெரியும். அவர்கள் என்னை நீங்களும் தடுப்பூசி போடாதீர்கள் பிறரையும் போட அனுமதிக்காதீர்கள் என்று எச்சரிக்கிறார்கள். என்ன ஆனாலும் சரி தடுப்பூசி மட்டும் போடாதீங்க என்று கூறுகிறார்கள்" என்று பேசினார்.
சுமந்த் ராமன்
இவரும் தடுப்பூசி போட்டு கொண்டபின் நடிகர் விவேக் இறந்தது குறித்து சந்தேகம் எழுப்பி ட்விட்டரில் பதிவிட்டார்.
கம்யூனிஸ்ட் Dr.ரவீந்திரநாத்
தொலைக்காட்சி விவாதங்களில் அடிக்கடி பங்கேற்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரான மருத்துவர் ரவீந்திரன் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் இந்தியாவில் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள் சர்வதேச அளவில் பணம் சம்பாதிப்பதற்காகவே இந்திய அரசு அவசர அவசரமாக தடுப்பூசிகளை பயன்பாட்டுக்கு கொண்டு வந்ததாக தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.
தமிழ் ஊடகங்கள்
மேற்கண்ட மருத்துவர் ரவீந்திரநாத்தின் பேட்டி 'Red Pix' என்ற யூடியூப் சேனலில் வெளியானது. இந்த சேனலில் இதுபோன்று தடுப்பூசி குறித்து தவறான ஆதாரமற்ற அச்சத்தை விதைக்கும் தகவல்களை பரப்பும் வகையில் பல வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
நியூஸ் 7 தொலைக்காட்சி "மாரடைப்பை வரவழைக்கும் தடுப்பூசி? மனம் திறக்கிறார் பிரபல மருத்துவர்" என்று தலைப்பிட்டு ஒரு பேட்டியை வெளியிட்டது. இதில் பேசிய மருத்துவர் தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்படாது என்று கூறியபோதும் தலைப்பு அவர் அவ்வாறு கூறியதை போல் வைக்கப்பட்டுள்ளது.
LMES (Let's Make Engineering Simple) என்ற மற்றொரு பிரபல யூடியூப் சேனல் "கொரோனா தடுப்பூசி உயிரை கொல்லுமா?" என்ற தலைப்பில் தடுப்பூசி குறித்து அச்சத்தை விதைக்கும் ஒரு வீடியோவை வெளியிட்டது.
பிரபல செய்தி சேனலான புதிய தலைமுறை, ஓமந்தூரார் மருத்துவமனையில் நடிகர் விவேக் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின்னர் அளித்த பேட்டியை "தடுப்பு ஊசி செலுத்தி கொண்டாலும் கொரோனா வரும்" என்ற தலைப்பில் அதை வீடியோவாக யூடியூபில் வெளியிட்டது. வீடியோவை 6.8 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இது போக "டெல்லியில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 52 பேருக்கு பக்க விளைவுகள்" என்ற தலைப்பில் ஜனவரி 17 அன்றும், "கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 447 பேருக்கு பக்கவிளைவு" என்ற தலைப்பில் ஜனவரி 18 அன்றும் தடுப்பூசி குறித்த அச்சத்தை அதிகரிக்கும் வகையில் வீடியோக்களை பதிவேற்றம் செய்தது. இவற்றை முறையே 5.72 லட்சம் மற்றும் 2.16 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
Behindwoods யூடியூப் சேனல் தடுப்பூசி போடுவதை 'ஊக்குவிக்க' நடிகர் கார்த்தியை வைத்து மருத்துவரை பேட்டி எடுத்து ஒரு வீடியோவை வெளியிட்டது. ஆனால் வீடியோவின் தலைப்போ "எந்த தடுப்பூசி நல்லது?" என்ற ஒரு கேள்வியோடு, எல்லா தடுப்பூசிகளும் நல்லவை தான் என்று கூறுவதற்கு பதிலாக, தடுப்பூசிகளில் போட்டுக் கொள்ளக் கூடாத தடுப்பூசிகள் உள்ளன என்பது போன்ற எண்ணத்தை விதைக்கும் வண்ணம் வைக்கப்பட்டிருக்கிறது.
நடிகர் விவேக் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, "கொரோனா தடுப்பு ஊசி போட்டுக் கொண்ட நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி" என்று Red Pix யூடியூப் சேனல் செய்தி வெளியிட்டது. இதற்கு 1.13 லட்சம் பார்வையாளர்கள்.
திமுக குடும்பத்தினரால் நடத்தப்படும் சன் நியூஸ் தொலைக்காட்சி இன்னும் ஒரு படி மேலே போய் ஜனவரி முதல் பிப்ரவரி வரை பின்வருமாறு செய்தி வெளியிட்டது.
"கொரோனா தடுப்பு ஊசி போட்டு கொண்டவர்களில் 99 பேருக்கு பக்க விளைவுகள்"- ஜனவரி 17ஆம் தேதியில் வந்த வீடியோவுக்கு 2.25 லட்சம் பார்வையாளர்கள்
"கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர் பலி"
"விரும்பாவிட்டால் தடுப்பூசி போட வேண்டாம்"- கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகளுக்கு தடை விதிக்குமாறு தொடரப்பட்ட வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது தான் சன் நியூஸ் தொலைக்காட்சி இப்படி செய்திப்படுத்தியது
பிபிசி தமிழ் செய்தி சேனல் தடுப்பூசி பற்றிய சந்தேகங்களை போக்குவதற்காக ஒரு வீடியோவை வெளியிட்டது. ஆனால் அதற்கு தலைப்போ "Corona Vaccineல் பன்றி கறியா? தடுப்பூசி குழந்தையின்மையை ஏற்படுத்துமா? உண்மை என்ன" என்று கொடுக்கப்பட்டிருந்தது.
இதேபோல் தந்தி செய்தி தொலைக்காட்சியும் "கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர் பலி" என்று ஏப்ரல் 25 அன்று செய்தி வெளியிட்டது.
பிப்ரவரி மாதத்திலேயே ரியாஸ் என்ற நபர் தடுப்பூசி போட்டுக் கொண்ட பின் தனது உடல் நலம் பாதிக்கப்பட்டதாகவும் தனக்கு மூளையில் நரம்பியல் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததை பற்றி செய்தி வெளியிட்டு தடுப்பூசி குறித்தான அச்சத்துக்கு வழிவகுத்தது.
இன்று கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் கோர தாண்டவத்தால் மக்கள் ஆக்சிஜன் கிடைக்காமலும் அதனால் உயிரிழந்து மயானத்தில் குவியும் சடலங்களாலும் தமிழகம் தவித்துக் கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் காரணமான, தடுப்பூசி மீது அச்சத்தை ஏற்படுத்தி சந்தேகத்தை விதைத்து தொற்று பரவல் அதிகரிக்க வழிவகுத்தவர்கள் இவ்வளவையும் செய்துவிட்டு எப்படித்தான் நிம்மதியாகத் தூங்குகிறார்களோ?
Translated from The Commune Mag