புத்தாண்டு அன்று கோவில் நிலத்தை உழும் வினோத திருவிழா!

Update: 2021-04-15 00:45 GMT

சித்திரை முதல்நாளான இன்று விவசாயம் செழிக்க வேண்டும் என்று ஏழு ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து 'நாளேறு' என்ற உழும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து கோவில் நிலத்தை உழுது கோவிலில் வழிபாடு செய்தனர்.

சித்திரை முதல் நாளை உலகம் முழுவதும் தமிழ் புத்தாண்டாக தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த சிறப்பு நாளில் தமிழர்கள் கோவிலுக்கு சென்று இந்த ஆண்டு முழுவதும் வளமுடன் வாழ வேண்டும் என்று கோவிலுக்கு சென்று தரிசனம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் ஏழு ஊரைச் சேர்ந்த கிராம மக்கள் ஒன்று சேர்ந்து 'நாளேறு' என்று அழைக்கப்படும் உழும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் நிலத்தில் ஏர் பூட்டி, உழுது வழிபாடு செய்தனர்.

அப்போது பிரம்பு குச்சியில் நுனியில் ஆணியடித்து அதில் பூக்களை சுற்றி நிலத்தை உழுது நன்றி தெரிவிக்கும் வகையில் கடவுளை வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து தென்பரங்குன்றம் குடவரைக் கோயிலுக்கு சென்ற ஏழு ஊர் மக்கள் இந்த வருடம் முழுவதும் விவசாயத்திற்கான கூலி மற்றும் விவசாயம் சார்ந்த பிரச்சனைகள் குறித்து ஆலோசனை கூட்டத்தையும் நடத்தினர்.

இந்த நாளேறு என்ற சம்பிரதாயத்தை பின்பற்றுவதன் மூலம் வருடம் முழுவதும் வெள்ளாமை செழித்து செல்வங்கள் பெருகும் என்று அப்பகுதி மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். கடந்த வருடம் கொரோனா நோய் பரவல் காரணமாக விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கினால் இந்த விழாவைக் கொண்டாட முடியாத நிலை இருந்தது. ஆனால் இந்த ஆண்டு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தது அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது என்று அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Similar News