குமரியில் பிரதமர் மோடி தியானம்.. தொடரும் எதிர்ப்பு.. பிரதமர் மோடி மீதான பயத்தின் வெளிப்பாடா?
பிரதமர் மோடியும், தியானமும்:
பிரதமர் நரேந்திர மோடி இன்று கன்னியாகுமரியில் உள்ள புகழ்பெற்ற விவேகானந்தர் பாறை நினைவிடத்தில் 45 மணி நேரம் அதாவது சரியாக 3 நாட்கள் அமர்ந்து தியானம் செய்ய உள்ளதால் அங்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தியானம் செய்வது இதுதான் முதல்முறையா? இதற்கு முன்பு அவர் தியானம் செய்து இருந்தாரா? என்று நீங்கள் கேட்கலாம். ஆம், அவர் ஒவ்வொரு நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகும் தியானத்தில் ஈடுபட்டு இருப்பது உங்களுக்கு தெரியுமா?
ஒவ்வொரு முறை நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகும் பிரதமர் மோடி தியானம் செய்வார். 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும் உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் மோடி தியானம் மேற்கொண்டார். அதேபோல, 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது, இமயமலையில் கேதர்நாத் குகையில் தியானம் மேற்கொண்டார். தற்போது 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் முடியும் நிலையில், கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் இன்று முதல் 3 நாள்களுக்குத் தொடர்ச்சியாக, 45 மணி நேரம் மோடி தியானம் செய்யவிருக்கிறார்.
பிரதமர் மோடி வருகையை தடுக்க நினைக்கும் எதிர்க்கட்சிகள்:
இந்த 3 நாள்களும், பாதுகாப்புப் படையினர், மருத்துவக் குழுவினர், கேந்திரா பணியாளர்கள் மட்டுமே விவேகானந்தர் பாறையில் தங்கி இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக 3,000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். கடற்படையினர், கடலோர காவல் படையினரும் தொடர்ந்து ரோந்து பணியில் சுற்றிக் கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில், பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கன்னியாகுமரிக்கு வந்து தியானம் செய்யக்கூடாது என எதிர்ப்பு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதில் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் கட்சியினர், திமுகவினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் என்று அனைவரும் தங்களுடைய எதிர்ப்பு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக தமிழகத்தை ஆளும் திமுக அரசு ஒரு படி மேல் சென்று பிரதமர் மோடி அவர்களின் இந்த ஆன்மீக பயணத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்து இருக்கிறார்கள்.