கடும் நிதி நெருக்கடி: இலட்சக்கணக்கானவருக்கு உணவு வழங்குவது நிறுத்தம் - ஐ.நா
உலக உணவுத் திட்டத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான நிதி நெருக்கடி காரணமாக லட்சக்கணக்கானவருக்கு உணவு வழங்குவதை நிறுத்தும் நிலைக்கு ஐ.நா தள்ளப்பட்டுள்ளது.
உள்நாட்டு போர் ,பொருளாதார நெருக்கடி, பருவநிலை மாற்றம் போன்ற பல்வேறு பிரச்சனைகளால் உணவு பற்றாக்குறையை எதிர்கொண்டு வரும் நாடுகளில் பட்டினியில் வாடும் கோடிக்கணக்கான மக்களுக்கு உலக உணவு திட்டம் என்ற சர்வதேச அமைப்பின் மூலம் ஐ.நா உணவு உதவியை வழங்குகிறது. சர்வதேச நாடுகள், பெரு நிறுவனங்கள் மற்றும் தனியார் நன்கொடையாளர்களிடமிருந்து கிடைக்கும் தன்னார்வ நன்கொடைகள் தான் உலக உணவு திட்டத்தின் நிதி ஆதாரமாக உள்ளது.
இந்த நிதியை கொண்டு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களுக்கு உணவு பொருட்களை வழங்கி வருகிறது. இந்த நிலையில் உலக உணவு திட்டத்திற்கு கிடைக்கும் நன்கொடைகள் கிட்டத்தட்ட பாதியாக சரிந்ததால் அந்த அமைப்பு கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இதன் காரணமாக உலக அளவில் லட்சக்கணக்கான மக்களுக்கு உணவு உதவியை நிறுத்த வேண்டிய கட்டாயத்துக்கு அந்த அமைப்பு தள்ளப்பட்டுள்ளது. இது குறித்து உலக உணவு திட்டத்தின் துணை நிர்வாக இயக்குனர் காவல் கூறியதாவது:-
திட்டம் செயல்படும் 86 நாடுகளில் ஆப்கானிஸ்தான் , சிரியா , ஏமன் மற்றும் மேற்காப்ரிக்கா உட்பட 38 நாடுகளில் ஏற்கனவே உதவிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இன்னும் சில நாடுகளில் விரைவில் உதவிகளை நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது . உலக உணவுத் திட்டம் முழுமையாக செயல்பட்டு தேவைப்படும் அனைவருக்கும் உதவி வழங்க 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்படும் . ஆனால் நாங்கள் 10 பில்லியன் டாலர்கள் முதல் 14 பில்லியன் டாலர்களையே இலக்காக வைத்திருந்தோம்.