புற்றுநோய் மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரி குறைப்பு - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!
புற்றுநோய் சிகிச்சைக்கான செலவைக் குறைக்கும் வகையில் புற்றுநோய் மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் 54-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி, கோவா, மேகாலயா முதல் மந்திரிகள் அருணாச்சலப் பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் துணை முதல் மந்திரிகள் மற்றும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நிதி அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்திற்குப் பின் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-
ஆன்லைன் கேமிங் நிறுவனங்களின் வருவாய் ஆறு மாதங்களில் அதிகரித்து ரூபாய் 609 கோடியாக உள்ளது. மத்திய அரசின் சட்ட விதிகளின்படி நிறுவப்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்கள் மாநில அரசுகளின் சட்ட விதிகளின்படி நிறுவப்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்கள் அரசு மற்றும் தனியாரிடமிருந்து வரி விலக்கு பெற்றவர்களிடமிருந்து ஆராய்ச்சி நிதியைப் பெறலாம் . அவர்களுக்கு ஜிஎஸ்டி வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரியும் குறைக்கப்படுகிறது.
புற்றுநோய் சிகிச்சைக்கான செலவை மேலும் குறைக்கும் வகையில் இது 12 சதவீதத்தில் இருந்து ஐந்து சதவீதம் குறைக்கப்படுகிறது. ஜிஎஸ்டி-இல் உள்ள எதிர்மறையான விமர்சனங்கள் குறித்தும் விரிவான விவாதம் மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக இறுதி முடிவை எடுக்க வருவாய்த் துறை கூடுதல் செயலர் தலைமையில் மத்திய மாநில அரசு அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்படும். அமைச்சர்கள் கொண்ட இரண்டு புதிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒன்று மருத்துவம் மற்றும் சுகாதார காப்பீடு .பீகார் துணை முதல் மந்திரி தலைமையில் இக்குழு செயல்படும். இது தொடர்பாக ஆராய்ந்து அக்டோபர் 2024க்குள் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று நாங்கள் கூறியுள்ளோம். இந்த அறிக்கையின் அடிப்படையில் நவம்பரில் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும். மருத்துவ சுகாதார காப்பீட்டு வரிவிகிதம் குறைப்பது குறித்து அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.