அரசின் செயல்பாடுகளை திரித்து செய்தி வெளியிடும் "இந்தியா டுடே" ஊடகம் - நேரடியாக களத்தில் இறங்கிய மத்திய அரசு!

Update: 2021-05-05 01:30 GMT

கொரோனா நிவாரண பொருட்களை திறம்பட ஒதுக்கீடு செய்தல் மற்றும் விநியோகிப்பதில் நேரத்தை வீணடிக்கவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

சர்வதேச அமைப்புகள் அனுப்பிய கொரோனா உதவிப்பொருட்கள் அடங்கிய முதல் பார்சல் கடந்த ஏப்ரல் மாதம் 21ம் தேதி இந்தியா வந்ததாகவும், ஆனால் இந்த உயிர்காக்கும் மருத்துவ பொருட்களை விநியோகிப்பதில் நிலையான செயல்பாட்டு வழிமுறையை உருவாக்க மத்திய அரசு ஒரு வார காலம் எடுத்துக்கொண்டது என்றும் இந்தியா டுடே வெளியிட்ட செய்தியில் குற்றம் சாட்டியுள்ளது.

இந்த செய்திக் கட்டுரை, உண்மையான தகவலை திரித்து கூறுகிறது. இது முற்றிலும் தவறானது என மத்திய அரசின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதில், சர்வதேச அமைப்புகள் வழங்கிய கொவிட் நிவாரணப் பொருட்களை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு ஒதுக்கீடு செய்வதற்கான நிலையான செயல்பாட்டு வழிமுறையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடந்த 2ம் தேதி வெளியிட்டது.

கூடுதல் செயலாளர் தலைமையின் கீழ், மத்திய சுகாதார அமைச்சகத்தில் ஒருங்கிணைப்பு பிரிவு கடந்த ஏப்ரல் 26ம் தேதி உருவாக்கப்பட்டது. பல தரப்பினர் இடையே இந்த ஒருங்கிணைப்பை சரியாகவும், திறம்படவும் மேற்கொள்ள அமைச்சகங்களுக்கு இடையேயான பிரிவும் ஏற்படுத்தப்பட்டது.

இதில் கல்வி அமைச்சகத்தின் இணைச் செயலாளர், வெளியுறவுத்துறை அமைச்சகத்திலிருந்து கூடுதல் செயலாளர் அந்தஸ்தில் இரண்டு அதிகாரிகள், சுங்கத்துறை தலைமை ஆணையர், விமானப் போக்குவரத்து அமைச்சகத்திலிருந்து பொருளாதார ஆலோசகர், சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இரண்டு செயலாளர்கள், இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் பிரதிநிதிகள் உள்பட பலர் இடம் பெற்றுள்ளனர்.

உண்மையான நிலவரங்கள் இவ்வாறு இருக்கும்போது, சில பொய் தகவல்களை மட்டும் தேர்ந்தெடுத்து பொதுவாக வெளியிடுவதை தவிர்க்கலாம் என்றும், தங்களது சொந்த கதைக்கு பொருந்தும் வகையில் உண்மையை மாற்றி கூற வேண்டாம் என்றும் இந்தியா டுடே அறிவுறுத்தப்படுகிறது என கூறியுள்ளது. 

Similar News