ஜெய் ஸ்ரீராம் கூறுமாறு இஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்டடதாக வெளியான செய்தி : உண்மை என்ன?

Update: 2021-06-16 08:45 GMT

தமிழக ஊடகங்களான சன் செய்திகள், பி.பி.சி தமிழ் மற்றும் கலைஞர் செய்திகள் தமிழ்நாட்டில் மதக்கலவரம் ஏற்படுத்துவதற்காக போலியான செய்திகளை வெளியிட்டு வருவதாகவும் எனவே இந்த செய்தி நிறுவனங்களின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

பி.பி.சி நியூஸ் தமிழ் ஜூன் 14-ஆம் தேதி செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் " 'ஜெய் ஸ்ரீராம்' என்று கூறுமாறு முஸ்லிம் முதியவரை தாக்கியதுடன் தாடியை மழித்த தீவிர வலதுசாரி கும்பல் - உத்தர பிரதேசத்தில் நிகழ்ந்த சம்பவம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதேபோல் சன் நியூஸ் செய்திகள் ஜூன் 15ஆம் தேதி "ஜெய் ஸ்ரீ ராம் சொல்லுமாறு இஸ்லாமியரை தாக்கிய கும்பல்!" என்ற ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. அதே போல் கலைஞர் செய்திகளும் "'ஜெய் ஸ்ரீராம்' கூறச் சொல்லி இஸ்லாமிய முதியவர் மீது கொலைவெறித் தாக்குதல் : பா.ஜ.க ஆளும் உ.பியில் கொடூரம்!" என்ற செய்தியை வெளியிட்டது.

ஆனால் இந்த செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட இந்த செய்தி முற்றிலும் தவறு என்பது கைது செய்யப்பட்டவர்களின் வாக்குமூலம் மூலம் தெரிய வருகிறது. இவர்கள் செய்தி வெளியிட்டதை போல் அங்கு நடக்கவே இல்லை என்பதும் 'மந்திரித்த தாயத்து' வாங்கி அந்த தாயத்து ஒழுங்காக வேலை செய்யவில்லை என்று அந்த முதியவரை சில இஸ்லாமிய இளைஞர்களே தாக்கியதும் தெரியவந்துள்ளது.

முதலில் அந்த நபர்கள் அந்த முதியவரை ஆட்டோவில் ஏற்றி சென்று ஒரு தனிமைப்படுத்தப்பட்ட இடத்திற்கு அழைத்துச் சென்று அடித்து உதைத்துள்ளனர். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ஆரிப், ஆதில், பர்வேஷ் கல்லு, போலி மற்றும் முஷாஹித் ஆகியோர் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் தாக்கப்பட்ட அந்த முதியவரிடம் இருந்து மந்திரிக்கப்பட்ட தாயத்தை இவர்கள் வாங்கியதாகவும் தாயத்து சரியாக வேலை செய்யாததால் முதியவரை தாக்கியதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் முதியவரை "ஜெய்ஸ்ரீராம்" சொல்ல சொல்லி அவர்கள் தாக்கவில்லை என்றும் உறுதியாகியுள்ளது. இவை அனைத்தும் இந்த செய்தி நிறுவனங்களுக்கு தெரிந்திருந்த போதிலும் இந்துக்கள் மீது அவதூறு பரப்ப வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செய்திகளை வெளியிட்டுள்ளனர் என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். எனவே இந்த செய்தி நிறுவனங்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.







மேலும் இந்த போலி செய்தியை முதலில் பரப்பிய தி வயர், ஆல்ட் நியூஸ் முஹம்மது சுபைர், பத்திரிகையாளர்கள் சிலர், இந்த காணொளியை நீக்காமல் போலி செய்தி பரவ காரணமாக இருந்த ட்விட்டர் உள்ளிட்ட 8 பேர் மீது உத்திரபிரதேச காவல்துறை FIR பதிவு செய்துள்ளது.

இந்த நிலையில் சன் நியூஸ் மற்றும் பி.பி.சி தமிழ் உள்ளிட்ட செய்தி வலைத்தளங்கள் மீதும் FIR பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக பா.ஜ.க செய்தி தொடர்பாளர் SG சூர்யா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

எனவே இந்த FIR வளையத்திற்குள் பி.பி.சி தமிழ், சன் நியூஸ், கலைஞர் செய்திகள் உள்ளிட்ட செய்தி நிறுவனங்களும் வரக்கூடுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Source : The Indian express

Similar News