தடுப்பூசி போட்டால் குழந்தை பிறக்காதா..? ஊடக செய்திகளின் உண்மை நிலை என்ன?

Update: 2021-06-22 05:32 GMT

தற்போதைய தடுப்பூசி திட்டம், பிரதமரால் கடந்த ஜூன் 7ம் தேதி அறிவிக்கப்பட்டது. அப்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மக்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றும், தகுதியான மற்றவர்களையும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

நாடு முழுவதும் தடுப்பூசி போடும் நடவடிக்கையை துரிதப்படுத்துவதிலும், விரிவுபடுத்துவதிலும் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது. தடுப்பூசி கிடைக்கும் அளவை முன்கூட்டியே மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தெரிந்து கொள்ளும் வகையில் தடுப்பூசி விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதனால் தடுப்பூசி விநியோகத்தை மாநிலங்களால் சிறப்பாக திட்டமிட முடிகிறது. கடந்த மே மாதத்தில் 7.9 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் கிடைத்தன. இது ஜூன் மாதத்தில் 11.78 கோடியாக அதிகரிக்கப்பட்டது.

இந்த நிலையில் குழந்தை பெறும் வயதில் உள்ளவர்களிடையே கோவிட் தடுப்பு மருந்தின் காரணமாக மலட்டுத்தன்மை ஏற்படுமென்று சில ஊடக செய்திகள் தெரிவித்துள்ளன. சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களில் ஒரு பிரிவினரிடையே பல்வேறு மூடநம்பிக்கைகள் மற்றும் பொய் தகவல்கள் பரவி கிடப்பதாகவும் கடந்த சில நாட்களாக செய்திகள் தெரிவித்தன.

தற்போதுள்ள எந்த தடுப்பு மருந்தும் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தாது என்றும், விலங்குகள் மற்றும் மனிதர்கள் மீது பரிசோதித்து பக்க விளைவிகள் இல்லை என்று உறுதியான பின்னரே அவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Similar News