பத்திரிகை தகவல் அலுவலகத்தின் உண்மைத் தன்மை (Fact Check) கண்டறியும் பிரிவு சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் 3 யூ-ட்யூப் சேனல்கள் தவறான தகவல்களை இந்தியாவில் பரப்பியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த 3 சேனல்களும் 33 லட்சம் சந்தாதாரர்களைக் கொண்டிருப்பதும், அவர்கள் 30 கோடிக்கும் அதிகமான முறை இந்த தவறானத் தகவல்களைப் பார்த்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
சமூக ஊடகங்கள் மூலம் தவறான தகவல்களைப் பரப்பிய யூ-ட்யூப் சேனல்களைப் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருப்பது இதுவே முதல்முறை. நியூஸ் ஹெட்லைன்ஸ், சர்காரி அப்டேட், ஆஜ் தக் லைவ் ஆகிய இந்த 3 யூ-ட்யூப் சேனல்களும் உண்மைக்குப் புறம்பானத் தகவல்களைப் பரப்பி இருப்பது அம்பலமாகியிருக்கிறது.
இந்த யூடியூப் சேனல்கள் உச்சநீதிமன்றம், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, அரசின் திட்டங்கள், மின்னணு வாக்குப்பதிவு எந்திரம், விவசாயக்கடன் தள்ளுபடி உள்ளிட்டவை குறித்துப் பொய் செய்திகளை வெளி யிட்டிருக்கின்றன.
உதாரணமாக, வாக்குச்சீட்டுகள் மூலம் எதிர்வரும் தேர்தல்கள் நடத்தப்படும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு, ஆதார் அட்டை, பான் கார்டு மற்றும் வங்கிக்கணக்கு வைத்திருப்போருக்கு மத்திய அரசு சார்பில் நிதியுதவி, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு தடை போன்ற பொய்யான செய்திகள் இந்த யூடியூப் சேனல்களில் வெளியிடப்பட்டிருக்கின்றன.
பத்திரிகை தகவல் அலுவலகத்தின் உண்மைத்தன்மை கண்டறியும் பிரிவின் ஆய்வின் அடிப்படையில் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சத்தின் சார்பில் கடந்த ஓராண்டில் நூற்றுக்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்கள் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Input from: PIB