பாஜக நிர்வாகிகள் மது அருந்துவதாக சோஷியல் மீடியாவில் பரவி வரும் தகவல் உண்மையா?
தமிழக பாஜக நிர்வாகிகள் ஒன்றாக மது அருந்துவது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் உண்மை தன்மை என்னவென்று சோதித்து பார்க்கலாம்.
பரவி வரும் தகவல்:
தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அவர்களின் மேஜை மீது மது பாட்டில்கள் உள்ளது போல காட்டப்பட்டுள்ளது.
போட்டோவுக்கு கீழே, "குடிகாரர்களின் மீட்டிங்” எனக்கூறி அரசியல் கட்சி தலைவர்களை தனிப்பட்ட முறையில் கேலி செய்யும் வகையில் கருத்து பதிவிட்டு இருந்தனர்.
பலரும் இந்த படத்தை தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தமிழ்நாடு பாஜக அமைப்புச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் உண்மையாலுமே மது அருந்துவது போன்ற தோற்றத்தை சாமானிய மக்கள் மனதில் பதிய வைத்தது. உண்மையில் இது வேண்டும் என்றே திட்டமிட்டு பரப்பப்படும் போலி செய்தி என்பதை கண்டறிய முடிகிறது.
உண்மை என்ன?
படத்தில் மது பாட்டில்கள் எல்லாம் போட்டோ எடிட் முறையில் சேர்க்கப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே, உண்மைப் படத்தைத் தேடி ஆய்வு மேற்கொண்டோம். படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, தமிழ்நாடு பாஜக நிர்வாகி ஒருவர் இந்த படத்துடன் பதிவிட்டிருப்பது தெரிந்தது.
மேலே உள்ள பதிவில் இருப்பது தான் உண்மையான படம். தண்ணீர் பாட்டில்கள் உள்ள இடத்தை எல்லாம் எடிட் செய்து, மது பாட்டில் இருப்பது போல மாற்றி உள்ளனர்.