பிரதமர் செய்தியாளருக்கு பதில் சொல்லாமல் திணறியதாக வீடியோ வெட்டி ஒட்டி பரப்பும் கூட்டம்: ஒரிஜினல் வீடியோ வெளியானது!
அமெரிக்காவில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது நிருபர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தடுமாறியது போன்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
அமெரிக்காவில் நிருபர் ஒருவர், இந்தியாவில் சிறுபான்மையினர் குறிப்பாக இஸ்லாமியர்களின் பாதுகாப்பு, ஜனநாயகம் தொடர்பாக கேள்வி எழுப்பினார்.
நிருபரின் கேள்விக்கு நரேந்திர மோடி பதில் அளிக்க தயாராவதற்கு முன்பு காதில் மாட்டியிருந்த ஹெட்போனை கழற்றினார். அதன் பிறகு இந்தி மொழியில் அவர் பதில் அளித்திருந்தார். அப்போது, “இந்தியா, அமெரிக்கா இரண்டும் ஜனநாயக நாடு. ஜனநாயகம் நம்முடைய டிஎன்ஏ-விலேயே உள்ளது. ஜனநாயகம் நம்முடைய ஆன்மாவில் உள்ளது. அதன்படி நாம் வாழ்கிறோம். அது நமது அரசியலமைப்பில் எழுதப்பட்டுள்ளது. எனவே, சாதி, மதம் அடிப்படையில் பாகுபாடு என்ற கேள்வி எழாது” என்று நீண்ட விளக்கம் அளித்திருந்தார்.
ஆனால், சோஷியல் மீடியாவில் பரவும் வீடியோவில் பிரதமர் நரேந்திர மோடி, பதில் கூறாமல் ஹெட்போனை கழற்றியதாக மட்டும் காட்டப்பட்டுள்ளது. இது முழுமையான வீடியோ இல்லை. பிரதமர் மோடி நிருபரின் கேள்விக்கு பதில் அளிப்பதைத் தெளிவாகக் காண முடிந்தது.
வீடியோவின் 29.40வது நிமிடத்தில் அமெரிக்க அதிபர் பைடன் பேசும் போது, மோடி தண்ணீர் அருந்துகிறார். அந்த காட்சியை தனியாக எடுத்து, செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் தண்ணீர் குடித்தது போன்று தவறாக பதிவிட்டிருப்பது உறுதியாகிறது.
ஆங்கிலத்தில் கேட்கப்படும் கேள்விகள் உடனடியாக பிரதமர் மோடிக்காக மொழி பெயர்க்கப்படும். அதற்காக அவர் காதில் ஹெட்போன் மாட்டியிருந்தார். கேள்வி கேட்டு முடிந்ததும் அதை அவர் கழற்றியிருக்கிறார். வீடியோவை அந்த இடத்துடன் கட் செய்துவிட்டு, மோடி பதில் பேசத் தெரியாமல் நின்றார் என்பது போன்று தவறான தகவலைப் பகிர்ந்திருப்பது இதன் மூலம் தெளிவாகிறது.