வந்தே பாரத் ரயிலுக்கு காவி நிறம் ஏன்? விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ரயில்வே அமைச்சரின் விளக்கம்!

Update: 2023-07-10 04:54 GMT

28வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் காவி நிறத்தில் இருக்கும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

இதை எதிர்க்கும் சிலர் பாஜக அரசு ரயிலுக்கும் காவி சாயம் பூச பார்க்கிறது என குற்றம் சாட்டுகின்றனர். இதற்கான விளக்கத்தை அமைச்சர் கொடுத்துள்ளார். 

சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த பெட்டித் தொழிற்சாலையை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார். தெற்கு ரயில்வேயில் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த அவர், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் செய்யப்பட்டுள்ள மேம்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

மொத்தம் 25 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நியமிக்கப்பட்ட வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. இரண்டு ரயில்கள் இயக்கப்பட உள்ளன என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அடுத்து தயாராகியுள்ள 28வது ரயில் சோதனை முறையில் காவி நிறத்துக்கு மாற்றப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கின்றனர்.

28வது வந்தே பாரத் ரயிலின் புதிய காவி நிறம் இந்திய மூவர்ணக் கொடியில் உள்ளது என்று கூறினார். வந்தே பாரத் ரயில்களில் 25 புதிய மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

"வந்தே பாரத் ரயில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் வடிவமைக்கப்பட்டது. உள்நாட்டு பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களால் வடிவமைக்கப்பட்டது. வந்தே பாரத் ரயிலில் ஏசிகள், கழிப்பறைகள் போன்றவற்றைப் பற்றி பெற்ற கருத்துக்கள் அடிப்படையில் வடிவமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன" என்று அஷ்வினி வைஷ்ணவ் கூறினார்.


Similar News