அடிப்படையே தெரியாமல் ராணுவத்தை விமர்சித்த கனிமொழி: உண்மையில் நடந்திருப்பது இதுதானாம்!
தமிழக பெண்மணிக்கு மேஜர் ஜெனரலாக பதவிஉயர்வு வழங்கப்பட்டது தொடர்பான டிவிட்டர் பதிவை ராணுவ வடக்கு பிராந்தியம் நீக்கியது சர்ச்சையான நிலையில் ராணுவ தலைமையகம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
கன்னியாகுமரியைச் சேர்ந்த இக்னேஷியஸ் டெலோஸ் ஃப்ளோரா-வுக்கு, ராணுவத்தில் செவிலியராக ஆற்றிய பணியை கவுரவிக்கும் விதமாக மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு வழங்கப்பட்டது.
இதனை இந்திய ராணுவ வடக்கு பிராந்தியம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது. அதை பகிர்ந்த முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் முதன்முறையாக, மேஜர் ஜெனரல் பதவியை எட்டியது நம்பமுடியாத மைல்கல் என அவர் குறிப்பிட்டிருந்தார்.
முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்த சில மணி நேரங்களில், தனது பதிவை இந்திய ராணுவத்தின் வடக்கு பிராந்தியம் நீக்கியது. இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்தவுடன் அந்த பதிவு நீக்கப்பட்டது ஏன் என திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக பாதுகாப்புத் துறை சென்னை மண்டல மக்கள் தொடர்பு அதிகாரி கேள்வி எழுப்பிய நிலையில், மேஜர் ஜெனரல் பதவி உயர்வு குறித்த அறிவிப்பை ராணுவ தலைமையகம் வெளியிடும் என்பதால், டிவிட்டர் பதிவை தாங்கள் நீக்கியதாக வடக்கு பிராந்திய ராணுவம் விளக்கம் அளித்தது.