கொரோனா தடுப்பூசிக்கான சான்றிதழ் இல்லையென்றால் காப்பீடு அதிகரிக்குமா உண்மை என்ன ?

Update: 2021-03-11 08:08 GMT

ஒரு வருடமாக கொரோனா தொற்றுநோயால் பல கடினங்களைக் கடந்து வந்து, தற்போது அதற்கான தடுப்பூசியைக் கண்டுபிடித்து முதற்கட்டமாக மூத்த குடிமக்கள், 45 மற்றும் 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்குச் செலுத்தப்பட்டு வருகின்றது. இது ஒருபுறம் சென்று கொண்டிருக்க இதை வைத்துப் பல போலி செய்திகளும் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன.

தற்போது வைரலாகி ஒரு செய்தியாகத் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் அதற்கான சான்றிதழை வைத்துக்கொள்ளுமாறும் மற்றும் அது இல்லாமல் சுகாதார காப்பீட்டு நிறுவனங்கள் பாலிசி பிரீமியத்தை அதிகரிக்கக் கூடும் என்று செய்திகள் பரவி வருகின்றன.


 மேலும் அந்த வைரல் செய்தி, கொரோனா சிகிச்சைக்கு பின்னர் அதற்கான தடுப்பூசி செலுத்தியதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வலியுறுத்தக் கூடும் என்று கூறியுள்ளது.

இருப்பினும் இந்த செய்தி போலியானது என்று காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்(IRDA) தெரிவித்துள்ளது. இந்த செய்தி மூலம் பல மக்களைச் சென்று பாதிப்படையச் செய்கின்றது.

அந்த செய்தியில், "தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் அனைவரும் அதற்கான சான்றிதழ்களைக் கையில் வைத்துக் கொள்ளுங்கள். வருங்காலத்தில் சுகாதார காப்பீட்டு நிறுவனங்கள் சான்றிதழ் இல்லாதவர்களுக்கு பிரீமியத்தை உயர்த்தலாம்.," இந்த செய்தியானது இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் என் நண்பர் மூலம் தெரியவந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

"மேலும தடுப்பூசிகளுக்கு முன்பே நோய் இருப்பவர்கள் மருத்துவ சான்றிதழ் பெறுகையில் கவனமாக இருக்கவேண்டும். மேலும் நீங்கள் அதை பாலிசி பெறுகையில் முன்பே தெரிவிக்கவில்லை என்றால் உங்களின் அனைத்து சுகாதார காப்பீடுகளும் ரத்து செய்யப்படும்," என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.


இந்த செய்தியைத் தெளிவுபடுத்திக் கூறிய மும்பை IRDA அலுவலகத்தின் உதவி மேனேஜர் அசோக் ரானே, "இதுபோன்ற செய்திகளை IRDA வின் வலைத்தளத்தில் உறுதி செய்யாமல் பரப்பக் கூடாது. இதுபோன்ற செய்திகளை மக்கள் தங்கள் நண்பர்களுக்கு மற்றும் உறவினர்களுக்குப் பகிர்வதன் மூலம் வைரலாகி வருகின்றனர்.

இதுபோன்ற செய்திகளை உண்மை என்று நம்பி அதனை ஆயிரக்கணக்கான மக்களுக்குப் பகிர்ந்து வருகின்றனர். இந்த செய்தி முற்றிலும் போலியானது மற்றும் IRDA இதுபோன்ற அறிக்கையை வெளியிடவில்லை," என்று தெரிவித்திருந்தார். "இதுபோன்ற பல செய்திகள் நாள்தோறும் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகின்றன. மக்கள் அதனைத் தெளிவாகக் கையாள வேண்டும்," என்று ஸ்டார் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மேனேஜர் ரேஷம் சிங் தெரிவித்தார்.

Similar News