புதிய ரூ.1,000 நோட்டுகளை அறிமுகப்படுத்தி ரூ.2,000 நோட்டுகளை திரும்ப பெறப்போறாங்களா? - அரசு சொல்லும் விளக்கம் என்ன?
1000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் வரவுள்ளதாக சமூக ஊடகங்களில் வைரலான வீடியோ ஒன்று பரவி வருகிறது. 2016-ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது வெளியிடப்பட்ட ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெற்று மீண்டும் 1000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் அதிகாரப்பூர்வ உண்மைச் சரிபார்ப்பு, PIB Fact Check , இது போன்ற போலியான மற்றும் தவறான செய்திகளை மக்கள் பகிர வேண்டாம் என கேட்டுக்கொண்டது.
மேலும், ரூ.2000 நோட்டுகளை தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்யவில்லை என்று கூறியுள்ளது. ராஜ்யசபாவில் போலி ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த நிதியமைச்சகம், 2021-22 நிதியாண்டில் வங்கி அமைப்பில் 2,30,971 போலி ரூபாய் நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறியது.
கண்டறியப்பட்ட போலி நோட்டுகளில் 90% க்கும் அதிகமானவை தரம் குறைந்தவை; முக்கிய பாதுகாப்பு அம்சங்கள் எதுவும் அதில் இல்லை. இந்த நோட்டுகளின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த விவரங்கள் பொது மக்களுக்காக ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் வெளியிடப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.