பிரதமர் மோடிக்கு மேக்கப் போடும் பெண்ணிற்கு 15 லட்ச ரூபாய் சம்பளம் என்பதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“நரேந்திர மோடி பிரதமராக இருந்து நாட்டை நிர்வகிக்க நம் வரிப்பணத்தில் இருந்து கொடுக்கப்படும் மாத சம்பளம் ரூ.1.6 லட்சம். மக்கள் வரிப்பணத்தில் மேக்கப் போடும் பெண்ணிற்கு மோடி கொடுக்கும் மாத சம்பளம் ரூ.15 லட்சம்” என நியூஸ் கார்டு பகிரப்படுகிறது.
இந்த தகவல் கடந்த பல ஆண்டுகளாகவே பரவி வருகிறது. குறிப்பிட்ட புகைப்படத்தின் உள்ளே அமைந்திருக்கும் புகைப்படத்திலேயே மோடியின் மேக்கப் பெண்மணிக்கு 15 லட்சம் சம்பளம் என்கிற செய்தி உண்மையில்லை என்றே இடம்பெற்றுள்ளது.
உண்மையில் இந்த போட்டோ மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் பிரதமர் மோடியின் சிலையை அமைக்க அவரது அளவுகளை எடுக்கும் பெண் என்பது நமக்குத் தெரிய வந்தது.
கடந்த 2016ஆம் ஆண்டு புகழ்பெற்ற Madame Tussauds wax மியூசியம் கலைஞர்கள் மற்றும் வடிவமைப்பாளர்கள் பிரதமரின் உருவ அளவீடுகளை அவருடைய மெழுகுச்சிலைக்காக பெற்றுச் சென்றனர். குறிப்பிட்ட வைரல் புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள பெண் பிரதமரின் கண் அளவீட்டை மேற்கொள்ளும்போது அந்த காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் மோடிக்கு மேக்கப் போடும் பெண்ணிற்கு 15 லட்சம் சம்பளம் என்று பரவுகின்ற புகைப்படத்தகவல் முற்றிலும் தவறானது.