மகாராஷ்டிராவில் 18-44 வயதினருக்குத் தடுப்பூசி போடுவதை நிறுத்த மத்திய சுகாதார அமைச்சர் பரிந்துரைத்தது உண்மையா?
மகாராஷ்டிராவில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளித்து 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்குத் தடுப்பூசி வழங்குவதை நிறுத்த திட்டமிட்டுள்ள நிலையில், இதற்கான ஆலோசனையை மத்திய சுகாதார அமைச்சர் Dr ஹர்ஷ வரதன் வழங்கியதாகச் செவ்வாய்க்கிழமை அன்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டொப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த ஆலோசனையை மத்திய சுகாதார அமைச்சர் வழங்கவில்லை என்பதை மத்திய அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.
"நான் தனிப்பட்ட முறையில் மத்திய சுகாதார அமைச்சருடன் உரையாற்றினேன். மத்திய அரசாங்கத்திடம் தற்போது தடுப்பூசிகள் இல்லை. எனவே வேறு வழியின்றி, 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மெதுவாகத் தடுப்பூசி செலுத்த உள்ளோம். நாங்கள் வெளிநாடுகளிலிருந்தும் தடுப்பூசி வாங்க முயன்றோம், ஆனால் அங்கும் இல்லை," என்று ராஜேஷ் டொப் தெரிவித்தார்.
மேலும் அறிக்கையின் படி, மகாராஷ்டிராவில் 45 வயதுக்கு மேற்பட்ட ஐந்து லட்சம் பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசிக்காகக் காத்திருக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இரண்டாவது டோஸ்க்கு முன்னுரிமை அளிக்குமாறு மத்திய அரசாங்கம் திங்கட்கிழமை கேட்டுக்கொண்டது, இருப்பினும் அது 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்குத் தடுப்பூசி தாமதமாகச் செலுத்தவேண்டாம் என்று பரிந்துரைக்கவில்லை.