கோவிட்-19 சிகிச்சை பற்றி டாடா சுகாதார அமைப்புடன் இணைத்து தவறாக வைரலாக்கப்பட்டு வரும் செய்தி!

Update: 2021-04-05 12:22 GMT

கடந்த ஆண்டு உலகம் முழுவதும் பரவ தொடங்கிய கொரோனா தொற்று காலகட்டத்திலிருந்து சமூக ஊடகத்தில் பல்வேறு போலி செய்திகளும் பரவ தொடங்கிவிட்டன. இந்த போலி வைரல் செய்திகள் தவறான செய்தியைப் பரப்புவது மட்டுமல்லாமல், இது மக்களிடையே ஒரு பீதியையும் ஏற்படுத்துகின்றது. தற்போது நாடுமுழுவதும் மீண்டும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வீசும் நிலையில் இதே போன்று ஒரு வைரல் செய்தி வாட்ஸ் ஆப்பில் பரப்பப்பட்டு வருகின்றது.



 அந்த வைரல் செய்தியில் "கொரோனா தொற்றின் மூன்று நிலைகள்" குறித்த சிகிச்சைகள் டாடா ஹெல்த்துடன் இணைக்கப்பட்டு தவறாகப் பரப்பப்பட்டு வருகின்றது. அது வைரஸ் சிகிச்சை பற்றி தவறான செய்தியையும் பரப்பி வருகின்றது. அந்த செய்தியின் படி, ஒருவருக்கு மூக்கு வழியாக கொரோனா பரவினால், ஆவி பிடித்தல் மற்றும் வைட்டமின் C உட்கொள்ளுவதன் மூலம் அரை நாளில் குணப்படுத்த முடியும் என்று கூறப்பட்டிருந்தது. மேலும் இது டாடா குழுவின் ஆலோசகரால் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகின்றது.


மேலும் ஒருவருக்குத் தொண்டையில் கொரோனா தொற்று பரவினால் அவர் சுடு தண்ணீர் குடிப்பதன் மூலம் குணப்படுத்தலாம் என்றும். மூன்றாவது கட்டமாக, அவருக்கு நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டு மூச்சுத் திணறலால் அவதிப்படுகிறார் என்றால் மூச்சுப் பயிற்சியும் மற்றும் பாராசிட்டமால் உட்கொண்டால் போதும் என்று கூறப்பட்டிருந்தது. மேலும் அந்த வைரல் செய்தியில் மக்கள் கொரோனா தொற்று மருத்துவ கிட் வைத்திருக்க வேண்டும். மூச்சுப் பயிற்சியைச் செய்யவேண்டும் என்றும் அறிவுறுத்தியது.


இதேபோன்று கடந்த ஆண்டும் ஜூன் மாதத்தில் ஒரு வைரல் செய்தி பரவ தொடங்கியது. அதனை டாடா ஹெல்த் போலியானது என்பதை உறுதி செய்தது. ஒரு டிவிட்டர் பயனாளருக்குப் பதிலளித்த டாடா ஹெல்த்,"எங்களை மன்னித்து விடுங்கள், மேலே உங்களுக்குக் கிடைத்த செய்தி டாடா ஹெல்த்திடம் இருந்து அல்ல. இந்த செய்தி கிடைத்த குழுவிடமும் இதனைத் தெரிவியுங்கள்," என்று கூறியிருந்தது.




மக்கள் இதுபோன்று போலி செய்திகளை நம்பி அதனைப் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகின்றது. மக்கள் மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் உலக சுகாதார அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களுக்குச் சென்று இதுபோன்ற செய்தியை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Similar News