அமேசானில் மாதம் ரூ.2 லட்சம் சம்பளமா? ஏமாற்றப்பட்ட 9ம் வகுப்பு மாணவர்: தவறான செய்தி வெளியிட்ட ஊடகங்கள்!
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் அரசு உதவி பெரும் பள்ளியில் 9ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர் தனக்கு அமேசானில் வேலை கிடைத்துள்ளது, மாதம் 2 லட்சம் சம்பளம் என கூறினார்.
அவர் தயாரித்த மொபைல் ஆப் மூலம் இந்த வாய்ப்பு கிடைத்ததாக தெரிவித்தார். அவர் சொன்னதை கேட்டு தமிழ் ஊடகங்கள் செய்தியும் வெளியிட்டன. ஆனால் அதில் உண்மை இல்லை என தெரிய வந்துள்ளது.
இது குறித்து அந்த மாணவரை தொடர்பு கொண்ட உண்மை கண்டறியும் ஊடகம் ஒன்று அவரிடம் விசாரித்ததுள்ளது. முதலில் நான் உருவாக்கிய செயலிகளை ஆல்பா என்ற நிறுவனம் வாங்கியது என மாணவன் கூறியுள்ளார்.
ஒரு சான்றிதழும், அவரது செயலிக்கான தொகையும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் ஒரு பைசா கூட வரவில்லையான். வங்கி கணக்கு விவரம் கூட கேட்கவில்லையாம்.
அமேசான் நிறுவனம் தொடர்பு கொண்டதும் இதே போல தான் உள்ளது. தன்னை டெலிகிராமில் தொடர்பு கொண்டார்கள் என மாணவர் சொல்கிறார். மாதம் 2 செயலி உருவாக்கித் தந்தால் இரண்டு லட்ச ரூபாய் சம்பளம் தருவதாகக் கூறினார்கள்.
அவர்களுக்காக நான் எந்த செயலியையும் செய்யவில்லை. உண்மையில் அது அமேசான் நிறுவனம் தானா என்ற சந்தேகம் எழுகிறது. நான் சிறுவன் என்பதால் என்னை ஏமாற்றுகிறார்கள் என நினைக்கிறேன் என கூறியுள்ளார்.
எந்த நிறுவனமும் டெலிகிராம் மற்றும் மெசேஜ் மூலம் ஒருவரை தொடர்பு கொள்ளாது. இதன் மூலம் மாணவர் ஏமாற்றப்பட்டது தெரியவருகிறது.