மெய்யாலுமே சென்னை 99.5% சரி ஆகிடுச்சா? அளந்துவிடும் அதிகாரிகள்: கள நிலவரத்தை பாருங்கப்பா!

Update: 2023-12-10 01:06 GMT

கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை நகரின் நிலை குறித்தும், குறிப்பாக வட சென்னை பகுதிகளில் வசிக்கும் மக்களின் நிலை குறித்தும் அதிகாரிகள் கூறும் தகவலில் முரண்பாடு உள்ளது. சென்னையில் 99.5% இடங்கள் மலைநீர் தேக்கமின்றி இருப்பதாக தமிழக தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா கூறினார். அதாவது சென்னையில் உள்ள 35,000 சாலைகளில், 119 தெருக்களில் மட்டுமே தண்ணீர் தேங்கியுள்ளது. அவைகளும் அகற்றப்படும் என்றார்.

உண்மை என்ன?

வடசென்னையில் உள்ள புளியந்தோப்பு, பட்டாளம், எண்ணூர், மணலி, கொரட்டூர், கொடுங்கையூர் இன்னும் வெள்ளத்தில் மிதக்கிறது. புளியந்தோப்பின் மூன்றாவது தெரு, நான்காவது தெரு, முனிசாமி தெரு, அங்காளம்மன் கோவில் தெரு, கொடுங்கையூரில் உள்ள காவேரி நகர், அமுதம் நகர், வெங்கடேஸ்வரா நகர் என அனைத்து இடங்களிலும் குறைந்தது முழங்கால் அளவு வரை கழிவுநீர் கலந்த நீர் தேங்கி இருந்தது.

மணலியின் பர்மா நகர் 12வது தெரு, பெரம்பூர் ஜமாலியா நடைபாதை, சுரங்கப்பாதை, போரூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சாய்பாபா நகர் மற்றும் பள்ளிக்கரணையின் சாய் பாலாஜி நகர் ஆகியவற்றில் வெள்ள பாதிப்பு உள்ளது. 

திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை மற்றும் கோடம்பாக்கம் போன்ற மண்டலங்களில் முழுமையாக மின்சாரம் திரும்பியுள்ளதாக தலைமைச் செயலாளர் கூறினார். 18,857 மின்மாற்றிகளில் 7 மின்மாற்றிகள் மட்டுமே இன்னும் மின்சாரம் பெறவில்லை என்றார். "இது மொத்த மின்மாற்றிகளில் 0.04% மட்டுமே. இவைகளுக்கும் வெள்ளிக்கிழமை இரவுக்குள் மின்சாரம் கிடைக்கும்,'' என்றார். ஆனால், ஆறு மண்டலத்துக்கு உட்பட்ட புளியந்தோப்பில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு மின்சாரம் இல்லை.

புளியந்தோப்பில், டெமெல்லோஸ் ரோடு கால்வாயை ஒட்டிய முனுசாமி தெருவில் வெள்ளத்தில் மூழ்கி எலிகள், பூனைகள் மற்றும் நாய்கள் இறந்தன. புளியந்தோப்பு மூன்றாவது தெருவைச் சேர்ந்த சாரதா கூறுகையில், "எங்கள் வீடுகளில் கழிவுநீர் மற்றும் சகதி நிறைந்துள்ளது. "எங்களுக்கும் ஆறாவது நாளாக மின்சாரம் இல்லை. துவைக்காமல் அதே ஆடைகளை அணிந்திருக்கிறோம்" என்று அவர் கூறினார். டெமெல்லோஸ் சாலையில், வடிகால் அடைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி இரண்டு மோட்டார்களைப் பயன்படுத்தி, அதிலிருந்து தண்ணீரை வெளியேற்றி வருகிறது.

கொடுங்கையூரில் உள்ள காவேரி நகர் மற்றும் யூனியன் கார்பைடு காலனி மற்றும் எவரெடி காலனியின் உள்பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். "மின்வெட்டு காரணமாக எங்களால் எங்கள் தொலைபேசிகளை சார்ஜ் செய்ய முடியவில்லை. சில இடங்களில் முழங்கால் அளவு தண்ணீர் கழிவுநீருடன் கலந்துள்ளதால் எங்களால் வெளியே செல்ல முடியவில்லை” என்கிறார் காவேரி நகரைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான். முழுப் பகுதிக்கும், குறைந்த சக்தி கொண்ட ஒரு மோட்டாரை பயன்படுத்தி தண்ணீரை வெளியேற்றி வருவதாக அவர் கூறினார்.

பெரம்பூரில் உள்ள ஜமாலியா பாதசாரி சுரங்கப்பாதையில், சென்னை மேயர் ஆர்.பிரியாவின் வார்டு அலுவலகத்திற்குப் பின்புறம், முழங்கால் அளவு வெள்ளம் நின்றது. 



Similar News