உண்மை என்ன? -கிறிஸ்தவ போதகர் ஸ்டெயின்ஸ் கொல்லப்பட்ட கிராமத்தின் கவுன்சிலராக திரௌபதி முர்மு இருந்தாரா?
கிறிஸ்தவ மத போதகர் கிரஹாம் ஸ்டெயின்ஸ் அவரது இரண்டு மகன்களுடன் 1999 ஆம் ஆண்டு ஒடிசாவில் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்த கிராமத்தின் கவுன்சிலராக தற்போதைய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இருந்தார் என்ற ஒரு தகவலை சமூக ஊடங்களில் பலர் தற்போது பரவலாக பகிர்ந்து வருகின்றனர். இது பற்றி ஆராய்ந்த போது, 1999 ஆம் ஆண்டு தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்த பகுதியும் திரௌபதி முர்மு கவுன்சிலராக இருந்த பகுதியும் வெவ்வேறு மாவட்டங்களில் உள்ளது தெரிய வருகிறது.
வேறு எந்த வகையிலும் தற்போதைய ஜனாதிபதியின் பெயர் இந்தச் சம்பவத்தை பற்றிய செய்திக் குறிப்புகளிலும் இடம்பெறவில்லை. திரௌபதி முர்மு கவுன்சிலராக இருந்தாரா என்ற தகவலை அறிந்து கொள்ள அவர் 1997 ஆம் ஆண்டு கவுன்சிலராக எந்த உள்ளாட்சியில் இருந்தார் என ஆராய்ந்த போது, மயூர்பஞ்ச் என்ற மாவட்டத்தில் வார்டு உறுப்பினராக ரைரங்பூர் நோட்டிஃபைடு பகுதியில் இருந்தார் என்ற தகவல் கிடைத்தது.
கென்டுஜஹர் என்ற மாவட்டத்தில் உள்ள மனோகர்பூர் என்ற கிராம ஊராட்சியில் தான் கிரஹாம் ஸ்டெயின்ஸ் கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்ததாக தெரிய வருகிறது. ரைரங்பூர் மற்றும் மனோகர்பூர் இடையே உள்ள தூரத்தை ஆராய்ந்த போது 110கி.மீ தொலைவில் இருப்பதும் இரண்டு மாவட்டங்களுக்கும் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெவ்வேறு என்பதும் தெரிய வருகிறது. இந்த தகவல்களின் அடிப்படையில் பார்க்கும் போதுசமூக வலைத்தளங்களில் பரவலாக பரவி வரும் திரௌபதி முர்மு கிரஹாம் ஸ்டெயின்ஸ் கொல்லப்பட்ட பகுதியின் கவுன்சிலராக இருந்தார் என்பதும், அவருக்கு அந்தச் சம்பவத்தில் தொடர்பு இருக்கிறது என்பதும் பொய் என்பது தெரிய வருகிறது.
Source: NewsMeter