பரபரப்புக்காக செய்திகள் வெளியீடு - டி.வி சேனல்களுக்கு எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு

Update: 2022-04-25 08:31 GMT

தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அனைத்து தனியார் தொலைக்காட்சி சேனல்களுக்கும் ரஷ்யா-உக்ரைன் மோதல் குறித்து தவறான கூற்றுக்கள் மற்றும் வகுப்புவாத வெறுப்பைத் தூண்டக்கூடிய ஆத்திரமூட்டும் செய்திகளை தவிர்க்குமாறு கடுமையான அறிவுரையை வழங்கியுள்ளது.

இதுபோன்ற செயல்களில் ஈடுபட்ட சேனல்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற தவறுகளை மீண்டும் செய்ய வேண்டாம் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

வடமேற்கு டெல்லியில் நடைபெற்ற வன்முறை சம்பவம் தொடர்பாக சில சேனல்கள் சிசிடிவி காட்சிகள் மற்றும் வீடியோ கிளிப்புகளை வெளியிட்டு ஒரு சமூகத்தை குறிவைத்து மோதலையும் வன்முறையையும் உருவாக்கும் விதமாக செய்திகள் வெளியிடுகின்றன. மேலும் டிவி செய்தி சேனல்களின் விவாதங்களில் அநாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இதையும் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

1995 சட்ட விதிக்கு மாறாக எந்த செய்தியையும் தகவலையும் டிவி சேனல்கள் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'ரஷ்யா-உக்ரைன் போர் குறித்த செய்தி ஒளிபரப்பில் ஒரு தனியார் தொலைக்காட்சி, ரஷ்யா அணு ஆயுதத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இன்னும் 24 மணிநேரத்தில் அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும் என மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக உண்மை அற்ற தகவல்களை பரப்பி வருகின்றன' என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக சில ஊடகவியாளர்களும், ஊடகங்களும், ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்பாக சர்வதேச செய்தி நிறுவனங்கள் தரும் தகவலை திரித்தும், தவறாகவும் செய்தி வெளியிட்டுள்ளன.

Inputs From: News 18



Similar News