வேகமாக வளரும் நாடுகள் பட்டியலில் 3-ல் இருந்து 164வது இடத்திற்கு இந்தியா தள்ளப்பட்டதா? உண்மை என்ன?

Update: 2022-07-19 02:37 GMT

வேகமாக வளரும் நாடுகள் பட்டியலில் 3வது இடத்திலிருந்த இந்தியா, தற்போது 164வது இடத்துக்குத் தள்ளப்பட்டுவிட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

ஸ்கிரீன்ஷாட் பதிவில் ஆங்கிலத்தில், "இந்தியா தற்போது 193 நாடுகள் அடங்கிய உலகின் வேகமாக வளரும் நாடுகள் பட்டியலில் 164வது இடத்தில் உள்ளது. 2011ல் மிகப்பெரிய பொருளாதாரமாக 3வது இடத்தில் இருந்தது தற்போது 2021ல் 164வது இடத்தில் உள்ளது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

உண்மை என்ன?

பிஐபி எனப்படும் இந்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட ட்வீட் அடிப்படையில் இது பொய் என தெரிய வருகிறது. அந்த பிஐபி ட்வீட்டில் இந்தியா 164வது இடத்திற்கு தள்ளப்பட்டது என்ற தகவல் தவறானது என்று குறிப்பிட்டிருந்தனர்.

2021ம் ஆண்டு உலக வங்கி தரவுகள் அடிப்படையில் 27.31 டிரில்லியன் டாலர்களுடன் மிகப்பெரிய பொருளாதாரத்தை சீனா கொண்டுள்ளது. அதைத் தொடர்ந்து அமெரிக்கா உள்ளது. 10.21 டிரில்லியன் டாலர் உடன் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

ஒவ்வொரு நாட்டுக்கும் அதன் சொந்த நாணயம் உள்ளது. அதன் அடிப்படையில்தான் புள்ளிவிவரங்கள் வெளியிடப்படுகின்றன. இதை மற்றொரு நாட்டின் பண மதிப்புடன் ஒப்பிடும் போது விகிதங்கள் மாறும். அதனால் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை மதிப்பிடுவது கடினமாக மாறிவிடும். இதை சரியான முறையில் கணக்கிட பிபிபி எனப்படும் முறையை சர்வதேச நாணய நிதியம் பின்பற்றுகிறது. பிபிபி அளவுகோலின்படி இந்தியா 2011ம் ஆண்டிலிருந்து மூன்றாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தனர்.

இந்தியா 3வது இடத்தில் இருந்து 164வது இடத்துக்கு தள்ளப்பட்டது என்று எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. 2011ம் ஆண்டில் இருந்து பொருட்கள் வாங்கும் திறன் சமநிலை அடிப்படையில் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 

Similar News